குயின் மேரீஸ் பல்கலைக்கழகத்தில் 70% மேற்பட்ட மாணவர்கள் சிறிலங்காவில்
இனப்படுகொலை நடப்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்
இலண்டன் குயின் மேரீஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழன் (17.12.09)
இனப்படுகொலைக் கெதிரான வாக்குக் கணிப்பு ஒன்று இடம் பெற்றது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் மாணவர் குழுவும் (Amnesty International
Student Groups) தமிழர் இனப்படுகொலைக் கெதிரான மாணவர் அமைப்பும் SAGT
(Student Against Genocide of Tamil) இணைந்து இலண்டன் குயின் மேரிஸ்
பல்கலைக்கழக அனைத்து மாணவர் அமைப்பின் ஆதரவுடன் கடந்த 17 ஆம் திகதி சில
கோரிக்கைகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை
நடத்தினார்கள்.
அதேவேளை மாணவர் சமூகத்தினதும், பல்கலைக்கழக நிர்வாகத்தினதும்
வாக்குறுதிகளுக்கு அமைய கையெழுத்துப் போராட்டமும் நடைபெற்றது. அதன்
அடிப்படையிலேயே கருத்துக் கணிப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1) பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது பிரச்சனைகள் பற்றியதான தெளிவூட்டல்களை
வழங்குதல் (1948 -2009)
2) தமிழ் மக்கள் 60 வருட காலமாக தாழ்த்தப்பட்டு இனப்படுகொலைக்கு
உள்ளாக்கப்பட்டனர். ஆகவே அவர்கள் சுய நிர்ணயத்தின் அடிப்படையில் தமது
அரசியலை தாமே தெரிவு செய்தல்.
3) ஐ.நா.வின் சட்டதிட்டத்திற்கமைய கொசோவோ, கிழக்குத் தீமோர் போல் தமிழ்
மக்களும் தாமே தமது அரசியலை தீர்மானித்தல்.
4) குயின் மேரீஸ் பல்கலைக்கழகம் பிரித்தானிய அரசு இலங்கைக்கு 13.7
மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் வழங்கியமையைக் கண்டிக்க வேண்டும்.
5) அணிசேரா நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க குயின் மேரீஸ்
பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
6) 2010 ஆம் ஆண்டு இடம் பெற இருக்கும் பிரித்தானிய அனைத்து பல்கலைக்கழக
மாணவர் சமுதாய அமைப்பு (National Union of Student) மாநாட்டில் குயின்
மேரீஸ் பல்கலைக்கழக மாணவர் சமுதாயம் தமிழர் பிரச்சனையை தெளிவூட்டி
நியாயமாக செயற்பட வேண்டும்.
7) ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானிய அரசு, பிரித்தானிய வர்த்த வாணிப
சங்கம் (British Retail Consortium) மற்றும் மாக்ஸ் அன் ஸ்பென்சர் (M&S)
முதலானவற்றிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
8) மனித உரிமை மீறல், போர்க்குற்ற மீறல் யாரால் நடத்தப்பட்டிருந்தாலும்
அவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.
9) முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துமீறிய சிங்களக்
குடிற்றங்களை நிறுத்த வேண்டும்.
10) குயின் மேரீஸ் பல்கலைக்கழக நிர்வாகம் இலங்கையில் இனப்படுகொலை
தொடர்பான ஆய்வை நடாத்தி அதனை கல்வித் திட்டத்தில் இணைத்துக் கொள்ள
வேண்டும்.
ஆகிய தீர்மானங்களின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் 71.51 வீதத்தினர் இந்தத் தீர்மானங்களை ஏற்றுக்
கொண்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னர் ஏற்றுக் கொண்ட
உடன்படிக்கையின் பிரகாரம் கண்டனங்களை வெளியிட முன்வந்துள்ளது.
அதில் குயின் மேரீஸ் சமுதாயம் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக
பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது என்பது மாணவர்
அமைப்பின் மிகப்பெரிய வெற்றியே. அத்துடன் இந்த கருத்துக் கணிப்பு
வாக்கெடுப்புப் போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற வேண்டும்
என்பதே எங்களின் விருப்பம்.
பொதுவாக இனப்படுகொலைக்கோ போர்க் குற்றங்களுக்கோ தனிப்பட்ட ரீதியில்
வழக்குத் தொடர முடியாது. அதை ஒரு நாடே செய்ய வேண்டும் இதனால் தான் இந்த
SAGT அமைப்பு பிரித்தானியாவில் கல்வி கற்கின்ற மாணவர்களை அணிதிரட்டி
இதன்மூலம் பல்கலைக்கழகங்களினூடாக அந்த நாட்டிற்கு அழுத்தத்தைக் கொடுக்க
முன்வந்துள்ளனர். ஆகவே பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்கள் SAGT தொடர்பு
கொள்ளுங்கள்
0 Kommentare:
Kommentar veröffentlichen