நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று மாலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடம் நடந்தது.
விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வந்துள்ளன. ரசிகர்களை அழைத்தும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அரசியல் விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
விஜய் நடிக்கும் காவலன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசியதாக தெரிகிறது.
விஜய் அரசியலில் குதிப்பது உறுதி என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையன்று அரசியல் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி கட்சி துவங்குவாரா? அல்லது ஏதேனும் கட்சியில் இணைவாரா? என்ற யூகங்கள் எழுந்தன.
தற்போது புதிய கட்சி துவங்கி அ.தி.மு.க. கூட்டணியில் சேர முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் ஈடுபடுவார் என்கின்றனர். ஜெயலலிதாவை சந்தித்த போது இதுபற்றி எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாக கூறப்படுகிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen