மன்னார் சிலாவத்துறையில் இலங்கை முப்படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளும் மேற்பார்வை நடவடிக்கையில் கலந்து கொள்கின்றனர்.
இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த இரண்டாயிரத்து ஐநூறு படை வீரர்கள் இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சி நடவடிக்கைக்கு நீர்க்காகம் (தியகாவா) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தரை, கடல் மற்றும் வான் வழியாக கூட்டுப் பயிற்சியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் 29ம் வரை நான்கு நாட்கள் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.
எதிரிகளின் முகாம் ஒன்றை தாக்கிக் கைப்பற்றும் விதமாக முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் விமானப்படை கபீர் மற்றும் மிக் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், கடற்படையின் பல்வேறு படகுகளுக்கு மேலதிகமாக விசேட தாக்குதல் படகுகள் 40, பரசூட் படையணி, இராணுவ விசேட படையணி, கமாண்டோ படையணி மற்றும் தரைப்படையினர் ஆகிய இராணுவப் பிரிவுகள் பங்கெடுத்துள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் ஒத்திகையின் மேற்பார்வை நடவடிக்கையில் பங்கு கொண்டுள்ளனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen