Mittwoch, 27. Oktober 2010

ரஜினியின் அரசியல் ஆசை!

"தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டுவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடவிருக்கிறோம். இந்த விழா வழக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அல்லாமல் இயக்குநர்கள் நடத்தும் மிக வித்தியாசமான விழா வாக இருக்கும்' எனச் சொல்லியிருந் தார் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா.

அவர் சொன்னது போலவே மிக வித்தியாச மான, அர்த்தமுள்ள ஒருநாள் விழாவாக கடந்த 23-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
கமல், அஜீத் உட்பட சிலர் விழாவிற்கு வராவிட் டாலும் கூட ரஜினி, விஜய், சரத் உட்பட பெரும்பா லான முன்னணி நட்சத்திரங்கள் விழாவில் ஆஜராகியிருந்தார்கள்.



1931 முதல் 2010 வரையிலான காலகட்டங்களில் முக்கியமான இயக்குநர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரியும் அற்புதமான, அரிய புகைப்படங்களின் கண்காட்சியை டைரக்டர் விக்ரமன் பொறுப்பேற்று நடத்தினார். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



"ரத்தக்கண்ணீர்' நாடகத்தை ராதாரவி நடத்தி னார். தண்ணீர் தராத கர்நாடகா, முல்லைப் பெரி யாறுவில் பிரச்சினைபண்ணும் கேரளா, பாலாற்றில் அணைகட்டும் ஆந்திரா, ஈழத்தமிழர்களுக்காக கொதித்து எழாத தமிழ்நாடு... என தற்போதைய நாட்டு நடப்புகளையும் அப்பா எம்.ஆர்.ராதா பாணியில் ‘"ரத்தக்கண்ணீர்' நாடகத்தில் போட்டு வாங்கி பின்னிப் பெடலெடுத்தார் ராதாரவி.



""எனக்கும் ரோஜாவுக்கும் சின்னச்சின்ன விஷயங்களில் கூட பிரச்சினை வரும். ‘இந்த குடும்ப வாழ்க்கை தேவைதானா? என வெறுத்துப்போய் ஒருநாள் டைரக்டர் வீ.சேகர் சாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். "நீ சினிமா வில் டைரக்டர். ஒரு டைரக்டருக்கு எப்பவுமே ஜெயிக்கணும்கிற எண்ணம் அதிகமா இருக்கும். ஆனா குடும்பத்திலயும் நீ மட்டுமே ஜெயிக்க ணும்னு நினைக்கிற. வெற்றியை மனைவிக்கு விட்டுக் கொடுக்கணும். மனைவிகிட்ட கணவன் தோற்றா என்ன தப்பு? தோற்க முடியலேன்னாலும் தோற்ற மாதிரி நடிப்பா' என அட்வைஸ் பண்ணினார். அதன்படி நடந்த பிறகு எங்க வாழ்க்கை ரொம்ப சுமுகமா போய்க்கிட்டிருக்கு'' என ஆர்.கே.செல்வமணி வெளிப்படையாகப் பேசியது ரொம்ப டச்சிங்காக இருந்தது.



இன்னொரு நெகிழ்வான நிகழ்வு... இளையராஜா-பாரதிராஜாவின் யதார்த்தமான கலந்துரையாடல் தான். பல வருடங்களாக மனக்கசப்பால் பேசிக்கொள்ளாமல் இருந்த இந்த ஆருயிர் நண்பர்கள் இந்த விழாவில் தங்களின் முதல் சந்திப்பு, ஆழமான நட்பு, தொழில்முறை ஈடுபாடு ஆகியவற்றை பகிர்ந்துகொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.



விழாவின் ஹைலைட்டான சங்கதி.... ரஜினியை கே.பாலசந்தர் பேட்டியெடுத்ததுதான். இந்த விழாவிற்கு ரஜினி வருவதை உறுதிசெய்து கொண்ட பாலசந்தர் கேள்விகளை தயார் செய்துகொண்டு வந்தார். ரஜினியை மேடையில் ஏற்றி திடீர் என சர்ப்ரைஸ் இண்டர்வியூ பண்ணினார். இதை ரஜினி எதிர்பார்க்காவிட் டாலும் கூட கேள்விகளுக்கு திட்டமிடல் இல்லாமல் மிக இயல்பாக ரஜினி பதிலளித்தார்.

""சுயசரிதை எழுதுவீங்களா?''




""உண்மைகளை மறைக்காம எழுதுறதுதான் சுயசரிதை. உண்மைகளை நான் எழுதினால் பலபேரோட மனசு கஷ்டப்படும். சுயசரிதை எழுத காந்திக்கு தைரியம் இருந்தது. எனக்கும் அந்த தைரியம் வரும்போது எழுதுவேன்.''



""உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்?''



""சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூ.''



""இவ்வளவு உயரத்தில் உங்களை தூக்கி வைத்திருக்கும் சினிமாவுக்கு என்ன செய்யப் போறீங்க?''



""தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய்வேன்.''



""அரசியலுக்கு வருவீங்களா?''



""அது ஆண்டவன் கைலதான் இருக்கு.''



...இப்படி பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நாடகங்களில் நடிக்க ஆசை, சிக்கன் ரொம்ப பிடிக்கும், சிகரெட்டை ரொம்ப குறைச்சாச்சு, "ராகவேந்திரா', "பாட்ஷா', "எந்திரன்' ஆகியவை முக்கியமான படங்கள். பிடிச்ச டைரக்டர் மகேந்திரன்.... இப்படி ரஜினியின் பல பெர்ஸனல் விஷயங்களை அறிந்துகொள்ள உதவியது இந்த இண்டர்வியூ. அரசியலில் இறங்கும் எண்ணத்திலிருந்து ரஜினி இன்னும் பின்வாங்கவில்லை என்பதையும் அறியமுடிந்தது. ""அரசியல் வேண்டாம் என அவர் எண்ணவில்லை. சரியான தருணத்துக்காக காத்துக்கிட்டி ருக்கார்... என்பதை அழுத்தமாகச் சொன்னது ரஜினியின் பதில். அதிலும் தனக்குப்பிடித்த தலைவராக லீ குவான் யூவை சொல்லியிருப்பதன் மூலம் ரஜினி வித்தியாசமான அரசியல் சிந்தனையோடு இருக்கிறார் என்பதே சாட்சி'' என நம்மிடம் விவரித்தார் ஒரு முக்கிய சினிமாப் புள்ளி.



கல்யாணம் காட்சிக்கு.... குலசாமி கும்புடுக்கு சொந்த பந்தங்கள் ஒண்ணு சேர்றதுபோல இணை, துணை, உதவி இயக்குநர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.



நாளைய இயக்குநர்களிடம் பேசினோம்.



""இயக்குநர் சங்கம் ஒற்றுமையோடு தன் பலத்தையும், முக்கியத்துவத்தையும் நிரூபிச்சிருச்சு. உச்சகட்ட புகழ் அடைஞ்சாலும் "எளிமையும், இயல்புமா இருக்கணும்' என்பதை ரஜினியின் பேட்டியும், "சக கலைஞர்கள் ஆத்மார்த்தமா அந்நியோன்யமா பழகணும்' என்பதை இளையராஜா- பாரதிராஜா கலந்துரையாடலும், "சினிமா வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் ஒண்ணா போட்டு குழப்பக்கூடாது' என்பதை ஆர்.கே.செல்வமணி பேச்சும், "வர லாற்றில் நாமும் இடம்பெற வேண்டும்' என்கிற எண்ணத்தை விக்ரமன் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியும் உண்டாக்கியது.



சாதிக்க வேண்டும் என்கிற வெறியை எங்களுக்கு இந்த விழா உண்டாக்கிருக்கு'' என உற்சாகமாகச் சொன்னார்கள் நாளைய இயக்குநர்கள்.



-இரா.த.சக்திவேல்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen