Mittwoch, 20. Oktober 2010

சீன விரிவாக்க வலைக்குள் சின்னஞ்சிறு தென்னாசிய நாடுகள்: இலங்கைத் தீவு?

சீன - இந்திய வல்லரசுகளின் மத்தியில் முறுக்கேறிவரும் பூகோள - அரசியல் சூழ்நிலையை அதிக அளவில் தனது நலனுக்கேற்ற வகையில் சாதகமாக்கி கொள்ள முனையும் தெற்காசிய நாடுகளிலே இலங்கை முதலிடம் வகிக்கிறது எனலாம்.

இலங்கை பற்றிய குறிப்புகளுக்கு முன்பாக பூட்டான், மாலைதீவு போன்ற நாடுகளை கண்டுவிட்டு பின்புஇலங்கைத்தீவை பார்வையிடலாம்

பூட்டான்:

திம்பு என்று கூறியதும் எம்மில் பலருக்கு 1985ம் ஆண்டு தமிழர் தரப்புக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடம் பெற்ற பேச்சுவார்த்தை ஞாபகத்துக்கு வரலாம்.


திம்பு பூட்டானின் தலைநகராகும் நேபாளத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் செருகப்பட்டு கிடக்கும் ஒரு நாடு பூட்டானாகும். தனது பொருளாதார வளர்ச்சி சற்று பின்தள்ள பட்டு இருந்தாலும் பரவாயில்லை நிம்மதியான சந்தோசமான வாழ்வே முக்கியம் என கருதுகின்றது பூட்டான்.

பூட்டானின் கேந்திர முக்கியத்துவம் அது அமைந்திருக்கும் பகுதிக்கு தெற்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம், மணிப்பூர் நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளை இணைக்கக் கூடிய ஒடுங்கிய 'சிலிகுரி' என்ற பகுதி இருப்பதாகும். பொருளாதார வளத்திலோ இராணுவ பலத்திலோ அல்லது அனைத்துலக மட்டத்தில் பிரதான பாத்திரத்தை வகிக்ககூடிய நிலையிலோ இல்லாத பூட்டான் தமது ஐக்கியத்தையும், தனித்துவத்துவமான பிரதிநித்துவத்தையும் பேணிக்கொள்வதன் பொருட்டு தனது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முதன்மைபடுத்தி உலகில் தனது பிரதிநித்துவத்தை பதிய வைக்க நினைக்கிறது.


அதேவேளை, “சுதந்திரம் என்ற பெயரில் போராட்டங்களை அனுமதிக்க முடியாது” என கருத்து கொண்டிருக்கும் பூட்டான், சுதந்திரம் என்ற பெயரில் பண்பாடு சீரழிந்து போகாது பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.


இதற்காகவே தேசிய உடையை அணிய மறுத்த ஒரு லட்சம் நேபாளி மக்களை நாட்டை விட்டு அகற்றியுமுள்ளது. மேலும் உல்லாச பயணிகளின் வருகை மீதும் கடுமையான கட்டணங்களை அறவிட்டும் வருகின்றது.இருந்த போதிலும் தனது 16 வயதினிலே 1972ம் ஆண்டு மன்னராக முடிசூடிக்கொண்ட ஜிக்மி சிங்கே வாங்சுக் 1998ம் ஆண்டில் தானாக முன்வந்து மக்களாட்சிக்கு வழிவகை செய்தார்.

அத்துடன் சட்ட வல்லுனர்கள் ஊடாக புதிய யாப்பு வரைவிற்கும் உத்தரவிட்டிருந்தார். இதன்மூலம் மேற்குலகில் இருக்கக்கூடிய ஜனநாயக முடியாட்சிகள் போல ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவதே அவரது திட்டமாயிருந்தது.

பொருளாதார ரீதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலே தங்கி இருக்கும் பூட்டான் 92 சதவிகித இறக்குமதியையும் 99சதவிகித ஏற்றுமதியையும் இந்தியாவுடனேயே செய்து கொள்கிறது.

இந்திய பூட்டான் உறவுநிலை 1949ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒரு நட்பு ஓப்பந்தத்திற்கு ஏற்ப சுமூக நிலையே இருந்து வருகிறது.

ஆனாலும் 2004ம் ஆண்டு இந்திய வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், நாகாலாந்து பகுதி தீவிரவாதிகள் பயிற்சி கொட்டகைகள் அழிக்கும் பொருட்டு பூட்டானிய இராணுவத்துடன் இந்திய ராணுவமும் இணைந்து "Operation All Clear" என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை 1949 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை முதன்முறையாக செயற்படுத்தப்பட்டு பரீட்சித்து பார்க்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்தநடவடிக்கை மூலம் சீன பொருளாதாரவள மோகம் கொண்ட தெற்காசிய நாடுகள் மத்தியிலே பூட்டான் இன்னமும் இந்தியா பக்கம் உள்ளது என்பதில் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒருவகையில் மனத்திருப்தியை கொடுத்தது.


இதனைத் தொடர்ந்து 2008 நவம்பரில் புதிய மன்னராக வான்சுச் வம்சத்தை பிரதிபலிப்பதற்காக ஜிக்மி கெசர் நமயெல் வாஞ்சுக் முடிசூடப்பட்டுள்ளார்.


புதிய சீன நிறுவகத்திற்கு பின்பு சீன பூட்டானிய சமாதான ஒப்பந்தம் ஒன்றைத் தவிர வேறு எந்த வர்த்தக தொடர்புகளும் இரு நாடுகளுக்குமிடையில் என்றும் இருந்ததில்லை என்றே கூறலாம்.


திபெத் மீதான சீனாவின் படை எடுப்பை தொடர்ந்து திபெத்திய அகதிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சீன - பூட்டான் எல்லைப்பகுதிகள் மூடப்பட்டே இருந்தன. ஆனால் அண்மைக்காலமாக சீன பாதுகாப்பு படைகளின் ஊடுருவல்கள் சிலிகுரி பகுதியின் அண்மித்த பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



உலகப்போர் காலங்களில சுவிட்சர்லாந்து இருந்தது போல் தானும் தெற்காசியாவின சுவிட்சர்லாந்து போல் எப்பகுதிக்கும் பக்கம்சாராது இருப்பதையும், அமைதியான வாழ்வையும் கனவாக கொண்டிருக்கும் பூட்டான், இருபெரும் அயல் வல்லரசுகளின் போட்டியால் எதிர்காலத்தில் கரடு முரடான கடின பாதைக்குள் தள்ளப்படும் என்றே
 ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




மாலைதீவு:



ஆயிரக்கணக்கான சுண்ணக்கற் பாறைகளின் கூட்டம் இன்று மாலைதீவுகள் என்று அழைக்கப்படுகிறது.



ஆனால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அதன் அமைவிடம், அந்த தீவுக்கூட்டங்களின் ஜனநாயக அரசியல் முறைமையிலான அரசு, அதற்கான ஒருமைப்பாடு என்பன அத்தீவுகூட்டங்களை வெறும் சுண்ணக்கற் பாறைகள் என்று ஒதுக்கி விடாது சரியாசனம் வைத்து கதைக்கும் தகுதியை உலகின் மிகப்பெரிய வல்லரசுகள் இடையே பெற்றுக் கொடுத்துள்ளது.



அவ்வகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு கொண்டு மாலைதீவுகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முன் வந்துள்ளன.



இந்தியா தனது பங்கிற்கு பாரிய அதிவேக ரோந்து படகுகளும் அதற்கான தொழில்நுட்ப பயிற்சியும் கொடுப்பதுடன் மூன்றாண்டுகளுக்கு தொழில்நுட்ப வசதிகளும் செய்து கொடுக்கின்றது. அதேவேளை மாலைதீவு இராணுவத்திற்கான கவச வண்டிகளும், இதர பாதுகாப்பு உபகரணங்களும் உட்பட சுகாதாரம், பொதுமக்கள் விமான போக்குவரத்து, தொலை தொடர்பு என மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க முன்வந்திருக்கிறது.



உலகில் பெரிய நாடுகள், சிறிய நாடுகள், வல்லரசுகள், சிற்றரசுகள், வறிய நாடுகள், செல்வந்த நாடுகள் என்று எந்தவித பேதமும் இன்றி உலகின் அனைத்து நாடுகளுடனும் சீனா சமமான உறவு நிலையை வைத்திருக்கிறது என்று கூறியபடியே, மாலைதீவுடனும் தனது உறவைப்பேண பெரும் முயற்சிகள் செய்து வருகிறது சீனா.



இருநாட்டிற்கும் நன்மை தரவல்ல பொருளாதார அபிவிருத்தி, நன்மதிப்பு, சீன முதலீடுகளை அதிகரித்தல், மேலும் உல்லாச பயணத்துறையை அதிகரித்தல் என மாலை தீவுகளுக்கு சீனா பல சலுகைகளுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி உள்ளது. அத்துடன் கடல் ஆய்வு பகுதிகளிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது.



சீனா தனது கடல் விநியோகம் சம்பந்தமான கொள்கைகளில், விநியோக பாதைகளை தக்கவைத்து கொள்ளும் பொருட்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே பல துறைமுக நிலைகளை தன்வசப்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது இதனாலேயே கடல் பரப்பிலிருந்து உயர்ந்த தீவுகளில் ஒன்றாகக்கருதும் மறாவோ தீவுபகுதிகளில் சீனா அதிக ஆர்வம் காட்டுவதோடு தனது நீர்மூழ்கிகப்பல்கள் தங்கி நிற்க மறாவோ பகுதி தகுந்ததென இனங்கண்டுள்ளது. ஆனால் புதிய மாலைதீவு அரசாங்கத்தின் போக்குகளோ சீனாவின் திட்டங்களுடன் ஒத்துப்போவதாக தெரியவில்லை.  இந்து சமுத்திரத்தின் முக்கிய பகுதியில் இத்தீவுகள் அமைந்திருப்பதால் வல்லரசுகள் மாலைதீவின் மீது கண்வைத்து தமது நகர்வுகளை மேற்கொண்டு வரும் அதேவேளை மாலைதீவோ உலகின் தட்பவெட்ப அதிகரிப்பால் கடலினுள் மூழ்கிவருவதாக மாலைதீவு அரசு கவலை கொண்டுள்ளது.




ஆனால் வல்லரசுகள் தத்தமது நலன்களையே முன்னிலை படுத்தி செயற்படுவதால் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் வல்லரசுகளின் சக்திவள போராட்டங்களால் இயற்கை அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.







மாலைதீவிலே தற்பொழுது அதிபராக இருப்பவர் 43 வயதே நிரம்பிய முகமது நசீட் என்பவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எதேச்சதிகார பதவிவகித்து வந்த மகமூன் ஆப்துள் கயூமிற்கெதிராக பெரும் மக்கள் போராட்டங்கள் நடாத்தி அதனூடாக பதவிக்கு வந்தவராவார்.



இவர் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளுக்காகவும் மக்களாட்சியின் விழுமியங்கள் குறித்து பேசியதற்காகவும் பலமுறை சிறை சென்றவருமாவார். சிறிலங்காவிலே ஆரம்ப கல்வியும் இங்கிலாந்திலே உயர்கல்வியும் கற்ற நசீட் காலநிலை மாற்றம் குறித்து பெரும் கவனம் செலுத்துபவருமாவார். அண்மையில் 2020ம் ஆண்டளவில் மாலைதீவினை கரியமிலவாயு அற்ற தீவாக ஆக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக தானே தனது அதிபர் இல்லத்தின் கூரையில் சூரிய மின் கலன்களை பொருத்திக்கொண்டார் என்பது குறிப்பிட தக்கதாகும்.




சிறீலங்காவிலே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சிறீலங்கா அரசு கொடுத்து வரும் முக்கியத்துவம் போல் அல்லாது மாலைதீவிலே மறாவோ துறைமுகத்திற்கு புதிய மாலைதீவு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை என அவதானிகள் கருதுகின்றனர்.



தமது தீவு கூட்டங்களை நீர்மட்டம் அடித்து செல்வதை பெரும் பிரச்சனையாக கொண்டிருக்கும் மாலைதீவு மேலை நாடுகளின் நிதியுதவியிலும் ஆய்வுகளிலும் ஒப்பந்தங்களிலும் பெருமளவு தங்கியுள்ளது. இதனால் சீன நீர்மூழ்கிகள் 'டியாகோ கார்சிய' அமெரிக்க தளங்களுக்கு அண்மையில் உள்ள மறாவோ தீவுக்கூட்டங்களில் குடியேற அமெரிக்கா உட்பட இந்தியாவும் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே.


'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen