உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 1-0 என்கிற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வென்று முதல் முறையாக ஸ்பெயின் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கூடுதல் நேரத்தின் 26 ஆவது நிமிடத்தில் இனியேஸ்ட்டா ஸ்பெயினின் வெற்றி கோலை அடித்தார்.
கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டம் ஜொஹனஸ்பர்கின் சாக்கர் சிட்டி விளையாட்டு அரங்கத்தில் இடம் பெற்றது.
இறுதிப் போட்டியில் மோதிய ஸ்பெயின் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளுமே இது வரை கால்பந்து உலகக் கோப்பையை வென்றதில்லை. அதிலும் குறிப்பாக ஸ்பெயின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இதுவே முதல் முறை.
நெதர்லாந்து நாட்டு அணி மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. முன்னர் 1974 மற்றும் 1978 ஆம் ஆண்டு இடம் பெற்ற போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்திருந்தது.
சாக்கர் சிட்டி விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தப் போட்டியை உலகம் முழுவதிலும் 70 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்திருபார்கள் என சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபா கூறியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இறுதிப் போட்டியை காணும் விதமாக தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன என ஃபிஃபாவின் ஒளிபரப்பு பிரிவின் தலைவர் நிக்கலா எரிக்ஸன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா வந்தார்
தள்ளாத வயதிலும் மனைவியுடன் வந்தார் மண்டேலா
போட்டி தொடங்குவதற்கு முன்னர் இடம் பெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிகளின் போது தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஒரு சிறிய வாகனத்தில் தனது மனைவியுடன் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஐரோப்பாவுக்கு வெளியே இடம் பெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டியை ஒரு ஐரோப்பிய நாடு வெல்வது இதுவே முதல் முறை.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இதுவரை பிரேசில் ஐந்து முறை(1958,1962,1970,1994, 2002) வென்றுள்ளது. இத்தாலி நான்கு முறையும்(1934,1938,1982,2006), ஜெர்மனி மூன்று முறையும்(1954,1974,1990) வென்றுள்ளன.
முதல் உலகக் கோப்பை போட்டியை 1930 ஆம் ஆண்டு வென்ற உருகுவே அணி மீண்டும் 1950 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது.
1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் அர்ஜெண்டினா கோப்பை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டும் பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டும் வெற்றி பெற்றிருந்தன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்றுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் எட்டாவது நாடாக சேர்ந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெறாவிட்டாலும், அந்த நாட்டைச் சேர்ந்த ஹோவர்ட் வெப் இறுதிப் போட்டியின் பிரதான நடுவராக செயற்பட்டார்.
RSS Feed
Twitter



Montag, Juli 12, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen