Donnerstag, 24. Juni 2010

இத்தாலி வெளியேறியது

தென் ஆப்பிரிகாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.


சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்த முக்கியமான போட்டியில் ஸ்லொவேக்கியா நாட்டு அணி இத்தாலி அணியை 3-2 என்கிற கோல் கணக்கில் வென்றது.



ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்திலும், 73 ஆவது நிமிடத்திலும் ஸ்லொவேக்கிய அணியின் ராபர்ட் விட்டேக் அடித்த கோல்கள், இத்தாலியை உலகக் கோப்பையை விட்டு வெளியேற வழி வகுத்தது.



ஸ்லொவாக்கிய அணி 2-0 என்கிற கணக்கில் முன்னணியில் இருந்த நிலையில், அந்த அணியின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே தோன்றியது.



ஆனால் ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் இத்தாலியின் டி நட்டாலே ஒரு கோல் அடிக்க 2-1 என்கிற நிலை ஏற்பட்டது. ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில், ஸ்லொவாக்கியாவின் காப்னெக் ஒரு கோலை அடிக்க அந்த அணி 3-1 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றது.



ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பிறகு போட்டி உபரி நேரத்துக்கு சென்றது. அந்த உபரி நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் இத்தாலியின் க்வாக்ரெலா ஒரு கோல் அடிக்க 3-2 என்கிற நிலை உருவானது.



உபரி நேரத்தின் இறுதி நான்கு நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருக்க முடிவில் 3-2 என்கிற கணக்கில் ஸ்லொவாக்கியா வென்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.



ஃஎப் பிரிவில் பராகுவே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், பராகுவே அணியும் இதே பிரிவில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.



இத்தாலி ஸ்லொவேக்கிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இத்தாலிய தற்காப்பை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் பல வீரர்கள் ஸ்லொவேக்கிய அணியின் கோல் வலையை நோக்கி முன்னேறியதே இத்தாலிய அணி தோல்வியடைந்து வெளியேறியதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.



இத்தாலிய அணி இந்தப் போட்டியை டிரா செய்திருந்தால் கூட இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் இருந்தது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen