இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை மட்டுப்படுத்தப்பட்ட மேலதிக காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இலங்கையின் இறைமைக்கு பொருத்தமற்றவையாக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளதாக கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவை குறித்து இலங்கை அமைச்சரவை விவாதித்ததாகவும் ஆயினும் அவை இலங்கை இறைமைக்கு பொருந்தாதவையாக இருப்பதாக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நீண்ட கால கூட்டுறவை தொடர்வதற்கு தமது தரப்பில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக தாம் பல நடவடிக்கைகளை இதுவரை எடுத்துள்ளதாக தமது அறிக்கையில் கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை தாம் ஏற்க முடியாதிருப்பதற்கான காரணங்களையும் விபரித்துள்ளது.
ஜி எஸ் பி பிளஸ் அமலில் இருந்த காலப்பகுதியில் அதனால் இலங்கைக்கு கிடைத்த நன்மைகளை இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை வரவேற்றுள்ளது. இருந்த போதிலும், இலங்கையின் மற்றும் அதன் மக்களின் சுதந்திரத்துக்கு துரோகம் இழைக்கும் நிபந்தனைகளின் அடிப்படைகளில் உதவிகளைப் பெற தாம் தயாராக இல்லை என்று இலங்கை ஜனாதிபதி முன்னர் பேசியிருந்ததையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்தின் சவால்களை வெற்றிகரமாக தோற்கடித்த இலங்கை மக்கள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கான சவால்களையும் அதேயளவு வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen