(மூவேந்தர்)
"அரசன் தோற்றால் ஆண்டி கூட திரும்பிப் பார்க்க மாட்டான்" என்பது முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகள் ஒன்று. இந்த பழமொழி விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் திருமதி பார்வதி அம்மாளுக்கு பொருத்தமாக இருக்கிறது.
பிரபாகரனின் தாயார் இப்போது மலேசியாவில் இருக்கிறார். இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னைக்கு போனார். ஆனால், குடிநுழைவுத்துறையினர் இவரை சென்னையில் கால் வைக்க விடவில்லை. அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டனர்.
பிரபாகரன் குடும்பத்தினர் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என அந்த நேரத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அதனால்தான் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார் என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கூறிவிட்டார்.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது கருணாநிதியின் சதி என்று கூக்குரலிட்ட வைகோ இந்த அறிக்கைக்கு பின்னர் பொறி கலங்கிப் போய் வாய் பொத்தி அமைதியாகி விட்டார். வைகோவால் யாரை வேண்டுமானாலும் சாட முடியும். சவாலுக்கு அழைக்க முடியும். ஆனால், ஜெயலலிதா என்றால் நாக முல்லி வேரைப் பார்த்த நல்ல பாம்பு போல் படத்தை கீழே போட்டு பம்மி விடுவார்.
திருமாவளவன் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆனால், திமுக கூட்டணிக்குள் இருப்பதால் இவர் தணிக்கை செய்து தான் கர்ஜனை புரிவார். கலைஞருக்கு கடுகளவு பிரச்சினை வராமல் இருக்க வேண்டும் என்பது இவரது ஆதங்கம். இவருடைய போராட்டத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ இவருக்கு பலன் கிடைக்க வேண்டும். பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும்.
விடுதலைப்புலிகள் என்றால் சீறிப்பாயும் சிங்கமாக பிடறியைச் சிலிர்ப்பவர் சீமான். பார்வதி அம்மாள் விஷயத்தில் ஆர்ப்பாட்ட பந்தல் போட நினைத்தார். கதையாகவில்லை. அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டு... மலேசியாவுக்கு தாவி விட்டார்.மலேசிய குடிநுழைவுத்துறையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை
தமிழர்களை விடுவிக்க வேண்டும் என மலேசியாவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
மருத்துவர் ராமதாஸ் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அடுத்த பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லை என்றால் முள் வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்களின் பிரச்சினையைத் தூசு தட்டி எடுத்து துவையல் அரைப்பார். கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டால் பிரபாகரனா... பார்வதி அம்மாளா... இவர்கள் எல்லாம் யார் என்று மகன் அன்பு மணியிடம் வாஞ்சையோடு விசாரிப்பார்.
இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள். குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்வதி அம்மாள் பிரச்சினையில் தமிழக அரசுக்கோ மத்திய அரசுக்கோ நெருக்குதல் கொடுக்க முடியவில்லை. கூட்டத்தைக் கூட்டி பேரணி நடத்த முடியவில்லை. ஆனால், சொந்தப் பிரச்சினை என்றால் கோடி கோடியாக செலவழித்து மாநாடு நடத்தி மயக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் பிரச்சினை என்றால் வேட்டியை மடித்துக் கட்டி வீறு கொண்டு எழுந்து விடுகிறார்கள். அறிக்கை விடுக்கிறார்கள். முண்டா தட்டுகிறார்கள். சண்டைக் கோழி போல் தலையைச் சிலுப்பி சவால் விடுகிறார்கள்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் ஏடாகூடமாக நடந்தால் போலீஸ்துறை புகுந்து விளையாடி விடும். பின்னி பெடலெடுத்து விடுவார்கள். சட்டம் படித்த வழக்கறிஞர்களே சட்டை கிழிந்து மண்டை உடைந்து இரத்தக் கோலம் பூண்ட வரலாறும் உண்டு. அதனால்தான் இவர்கள் இன்னொரு நாட்டுப் பிரச்சினை என்றால் எள்ளளவும் இலக்கு இல்லாமல் அங்கிருந்தே எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
உண்மையிலேயே ஒரு தமிழனுக்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என இவர்கள் நினைத்தால் முதலில் இவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும். அந்த பிரச்சினை குறித்து மக்களுக்கு விளக்கி அவர்களை ஒன்று படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு சுயநல அரசியலுக்காக சூதாட்டம் நடத்தக்கூடாது என்பது அந்நிய நாட்டு அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
திருமதி பார்வதி அம்மாள் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார்.
ஒரு பக்கம் இது நிம்மதியைத் தந்தாலும் படுக்கையில் இருக்கும் பார்வதி அம்மாளை ஏதோ அகில உலக தீவிரவாதி போலவும் அவரை உள்ளே விட்டால் தமிழகத்தை தகர்த்துவிடுவார் என்பது போலவும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஜால்ரா போடும் கட்சிகளும் நினைப்பது பைத்தியகாரத்தனமாகும்.
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... மனிதாபிமானம் இருந்தால் மருத்துவம் உண்டு....என்பதை ஆட்சியாளர்களும் அறிய வேண்டும். ஆதரிப்பவர்களும் உணர வேண்டும் என்பது அந்த பார்வையாளர்களின் ஆதங்கம்.
ஆகவே தமிழ்நாட்டு தலைவர்கள் அந்நிய நாட்டு பிரச்சினைகளில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் தமிழகத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படி வலுப்பெற்று விட்டால் வெறும் வாய்ச் சவடாலுக்கு வேலை இருக்காது என்பது அவர்களின் கருத்தாகும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen