மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு உரிய உதவிகள் செய்து அனுப்ப வேண்டும் என்றுக்கோரி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் சீமான் தலைமையில் மனு அளித்துள்ளனர்.
சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள்,குழந்தைகள் உட்பட 75 பேர், தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக்கொள்வோம் என்று கப்பலில் தப்பித்துச்சென்றனர்.
ஆனால் அப்படிச் சென்றவர்களின் படகை மலேசியா காவல்துறையினர் நடுக்கடலில் சுற்றிவளைத்துக் கைது செய்து,தற்பொழுது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றது.தற்பொழுது உள்ள நிலவரப்படி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாகத் தெரிகின்றது.
இது அவர்களை மரணக்குழிக்குள் தள்ளுவதாகும். நாம் மலேசிய அரசிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் எங்கள் தமிழர்களை,தங்கள் தாய் நாட்டில் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் எங்காவது சென்று பிழைத்துக்கொண்டால் போதும் என்று அகதிகளாகச் சென்ற தமிழர்களை அவர்கள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள், அல்லது அவர்களுக்கு உரிய உணவு,மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள்.
இதனை பன்னாட்டுச் சட்டங்களின் படி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.மீண்டும் அவர்களை சிங்கள இன வெறியனிடம் அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சீமான் இன்று காலை சென்னையில் உள்ள மலேசிய துணை தூதரகத்தில் கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவை துணை தூதர் பெற்றுக்கொண்டார்.
சீமானுடன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ராஜீவ் காந்தி, அந்தோணி சைமன் ராஜா, பேராசிரியர் தீரன், அதியமான், ஆனந்தராஜ், சிபிசந்தர், ஐந்து கோவிலான் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கில் தமிழர்கள் அணிதிரண்டு சென்றனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen