Samstag, 24. April 2010

இலங்கை - புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் -ஒரு பார்வை.

இலங்கையில் 37 அமைச்சர்கள், 39 பிரதியமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று (23.04.2010) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டது.
ஏழாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை நேற்று அறிவித்து அமைச்சுப் பொறுப்புகளை 37 பேரிடம் வழங்கியதோடு 39 பேருக்குப் பிரதியமைச்சுப் பொறுப்புகளை வழங்கினார்.

நேற்றுப் பிற்பகல் ஒரு மணியாகும் போது ஜனாதிபதியின் செயலாளரினால் அழைப்புவிடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக மண்டபத்தில் கூடியிருந்தனர். இந்த வைபவத்தில் உறுப்பினர்களின் உறவினர்கள் பங்கேற்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்தமர்ந்த பின்னர் சரியாகப் பிற்பகல் 1.31 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்தார். அதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசியலமைப்பின் 53 ஆவது சரத்துக்கமைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சமகாலத்தில் உறுதிப்பிரமாணம் செய்து கையெழுத்திட்டனர். அடுத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன. முதலில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண புத்தசாசண, சமய விவகார அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்க அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

நேற்றைய வைபவத்தில் 40 அமைச்சர்கள் பதவியேற்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 37 அமைச்சர்களே நியமிக்கப்பட்டனர். பிரதியமைச்சர்களாக 39 பேர் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் தகவல் மற்றும் ஊடகத்துறை, துறைமுக, விமான சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், விஞ்ஞான கைத்தொழில் போன்ற பதவிகளுக்கான நியமனங்கள் நேற்று இடம்பெறவில்லை.

நேற்றைய பதவியேற்பு வைபவத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, கலாநிதி சரத் அமுனுகம, பைசர் முஸ்தபா ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் பங்கேற்கவில்லை.பொதுத் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தொகுதியில் இடம்பெற்ற உட்கட்சி மோதல் காரணமாக எழுந்த ஒழுங்கீனங்கள் தொடர்பாக கட்சி மட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதால் அது முடிவுறும் வரை சில அமைச்சுப் பதவிகளுக்கு நியமனம் வழங்குவதை ஜனாதிபதி இடை நிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இ.தொ.கா.வைச் சேர்ந்த முத்துசிவலிங்கம் பிரதியமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட போதிலும் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியில் திருப்தியடையாத காரணத்தால் அவர் சபைக்கு வந்திருந்தபோதிலும் பதவியேற்கவில்லை. அவருக்கு பிறிதொரு அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னொருபோதும் இடம்பெறாத விதத்தில் அமைச்சுப் பதவி வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ புதிய நடைமுறையொன்றை கையாண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அமைச்சுப் பதவிக்கான நியமனக் கடிதங்கள் தமது கைகளுக்குக் கிடைக்கும் வரை எந்தவொரு அமைச்சரும் தமக்குரிய அமைச்சுப்பொறுப்பு எது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையே அதுவாகும்.

அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பலருக்கு இங்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதேசமயம் முன்னர் சிரேஷ்ட அமைச்சுப் பதவி வகித்த பலருக்குக் கிடைத்த அமைச்சுப் பதவிகளில் அவர்கள் திருப்தியடையாத மனநிலையில் காணப்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

புதிய அமைச்சரவையில் மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் இடம்பெற்றுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசியும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக ஏ.எல்.எம்.அதாவுல்லாவும், கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக ரிசாத் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதியமைச்சர் பதவிகளில் இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முத்துசிவலிங்கம், விநாயக மூர்த்தி முரளீதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ் புல்லாஹ் ஆகியோராவர்.

இதேவேளை, தகவல் மற்றும் ஊடகத்துறைக்கு டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அமைச்சுப் பொறுப்புக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. எனினும் அந்த அமைச்சுக்கான பிரதியமைச்சர் நியமனம் இடம்பெற்றுள்ளது. அப்பொறுப்பு ஊடகத்துறையில் பெரியளவில் விமர்சிக்கப்பட்டுவரும் மேர்வின் சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர்கள் விபரம்

1. பிரதமர் தி. மு. ஜெயரட்ன : பௌத்த, மத விவகாரங்களுக்கான அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த : எரிபொருள், கனியவள அமைச்சர்
3. ரட்ணசிறி விக்ரமநாயக்க : அரச உள் நாட்டலுவல்கள் அமைச்சர்
4. ஜீ.எல்.பீரிஸ் : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
5. நிமல் சிறிபால டி சில்வா : நீர்வழங்கல், நீர்முகாமைத்துவ, நீர்வள அமைச்சர்
6. திஸ்ஸ கரலியத்த : சிறுவர், மகளிர் விவகார அமைச்சர்
7. ராஜித சேனாரத்ன : கடற்றொழில் அமைச்சர்
8. மைத்திரிபால சிறிசேன : சுகாதர அமைச்சர்
9. தினேஷ் குணவர்த்தன : நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா : பாரம்பரிய, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
11. டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன : பொது நிர்வாக அமைச்சர்
12. ரிஷாட் பதியுதீன் : கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
13. பசில் ராஜபக்ஷ : பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
14. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ : கூட்டுறவு, நுகர்வோர் விவகார அமைச்சர்
15. மில்ரோய் பெர்னாண்டோ : மீள் குடியேற்ற அமைச்சர்
16. குமார வெல்கம : போக்குவரத்து அமைச்சர்
17. ஜனக பண்டார : காணி விவகார, காணி அபிவிருத்தி அமைச்சர்
18. டியூ. குணசேகர சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சர்
19. பந்துல குணவர்த்தன : கல்வி அமைச்சர்
20. சம்பிக்க ரணவக்க : மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
21. விமல் வீரவன்ச : வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22. மஹிந்த யாப்பா அபயவர்த்தன : விவசாய அமைச்சர்
23. டளஸ் அழகபெரும இளைஞர், வேலை வாய்ப்பு அமைச்சர்
24. சி.பி.ரத்நாயக்க : விளையாட்டு அமைச்சர்
25. சுமேதா டி ஜெயசேன : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
26. அநுர பிரியதர்சன யாப்பா : சுற்றாடல்துறை, பாதுகாப்பு அமைச்சர்
27.அத்தாவுத செனவிரத்ன : நீதி அமைச்சர்
28.மஹிந்த சமரசிங்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
29.ஜீவன் குமரதுங்க : தபால்துறை அமைச்சர்
30.பவித்ரா வன்னியாராச்சி : தேசிய மரபுரிமைகள், கலாசார அமைச்சர்
31.காமினி லொக்குகே : தொழில் உறவு உற்பத்தி மேம்பாட்டு அமைச்சர்
32.பியசேன கமகே : சுதேச வைத்தியத்துறை அமைச்சர்
33. எஸ்.பி.நாவின்ன : தேசிய மொழி, சமூக நல்லிணக்க அமைச்சர்
34.பீலிக்ஸ் பெரேரா : சமூக சேவைகள் அமைச்சர்
35.ஏ.எச்.எம்.பௌசி : இடர் முகாமைத்துவ அமைச்சர்
36. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் : பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
37. பி. தயாரத்ன - அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி

பிரதி அமைச்சர்கள் விபரம்

ஜயரட்ண ஹேரத் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
தயாசித திசேரா - துறைமுக பொது விமானத்துறை
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - பொருளாதார அபிவிருத்தித் துறை
லசந்த அழகியவண்ண - வீடமைப்பு நிர்மாணத்துறை
ரோஹன திசாநாயக்க - போக்குவரத்து
நிர்மல கொத்தலாவல - நெடுஞ்சாலைத் துறை
பிரேமலால் ஜயசேகர - மின் வலுத்துறை
துமிந்த திநாநாயக்க - தபால் மற்றும் தொலைத் தொடர்புத் துறை
கீதாஞ்சன குணவர்தன - வெளிவிவகாரத் துறை
விநாயகமூர்த்தி முரளிதரன் - மீள் குடியேற்றத்துறை
எச்.ஆர்.மித்ரபால - கால்நடை அபிவிருத்தி
இந்திக பண்டாரநாயக்க - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் துறை
முத்து சிவலிங்கம் - பொருளாதார அபிவிருத்தி
டபிள்யூ பீ ஏக்கநாயக்க - அனர்த்த முகாமைத்துவத் துறை
நியோமல் பெரேரா - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்
சரத் குமார குணரட்ன - அரச வழங்கல் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி
நந்தி மித்ர ஏக்கநாயக்க - உயர் கல்வி அமைச்சு
சிறிபால கம்லத் - காணி மற்றும் காணி அபிவிருத்தி
நிருபமா ராஜபக்ச - நீர்ப்பாசன மற்றும் நீர் விநியோகத் துறை
லலித் திசாநாயக்க - தொழில்நுட்பத் துறை
சரண குணவர்த்தன - கனியவள மற்றும் கைத்தொழில் துறை
ரெஜினோல்ட் குரே - நீதித்துறை
விஜித முனி சொய்சா - புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் துறை
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகாரம்
வீர குமார திசாநாயக்க - கலாச்சாரத்துறை
சந்திரசிறி சூரியாராச்சி - சமூக சேவைகள்
சுசந்த புஞ்சிநிலைமை – மீன்பிடி மற்றும் கடற்தொழில்த்துறை
திலான் பெரேரா – பொது நிர்வாக மற்றும் உள்விவகாரம்
லக்ஷ்மன் யாப்பா அபயவர்தனா – பொருளாதார அபிவிருத்தி
சந்திரசிரி கஜதீர – நிதி மற்றும் திட்டமிடல் துறை
ஜெகத் புஷ்பகுமார – விவசாயத் துறை
ரி.பீ. ஏக்கநாயக்கா – கல்வித் துறை
மகிந்த அமரவீர – சுகாதாரம்
ரோஹித்த அபயகுணவர்தன - துறைமுக மற்றும் பொது விமானத்துறை
எஸ்.எம். சந்திரசேன – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்
குணரட்ன வீரக்கோன் - தேசிய மரபுரிமை மற்றும் கலாச்சாரத் துறை
மேவின் சில்வா – ஊடகத்துறை
பந்து பண்டாரநாயக்கா – தேசிய வைத்தியத்துறை
சாலிந்த திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் துறை
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen