Sonntag, 25. April 2010

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்ப யார் காரணம்?

சென்னை பெரியார் திடலில் 'பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்ப காரணம் யார்' என்ற பெயரில் சிறப்பு கூட்டம் நேற்‌றிரவு நடைபெற்றது. விழாவிற்கு வழ‌க்க‌றிஞ‌ர் சாமிதுரை தலைமை தாங்கினார்.

இ‌ந்த ‌விழா‌வி‌ல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழக பொது செயலாளர் கலிபூங்குன்றன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகை‌யி‌ல், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16ஆ‌ம் தேதி இரவு மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவுக்கு இந்திய குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்திய குடியுரிமை அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கு, கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட தடை ஆணையே காரணம் என்பது தெரியவருகிறது. 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து பலரும் ஈழத்திற்கு திரும்பினர். அதே போல பிரபாகரனின் பெற்றோரும் தாயகம் திரும்பினர்.
அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பிரபாகரனின் பெற்றோர் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய பா.ஜ.க. மத்திய அரசு அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அந்த தடையின் அடிப்படையில் தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். அதாவது, பார்வதி அம்மாளை திருப்பி அனுப்புவதற்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு பெற்ற தடையாணைதான் காரணம். எனினும் அதனை காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் செய்ய விடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த செயலை மனித நேயம் உள்ள எவராலும் சகித்து கொள்ள முடியாது.
முதல்வருக்கு நெருக்கமான திராவிடர் கழக தலைவர் வீரமணி போன்றவர்கள், முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி பிரபாகரனின் தாயாரை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். பார்வதி அம்மாளை திரும்ப அனுப்ப காரணமானவர்களை தமிழ் சமுதாயம் ஒரு போதும் மன்னிக்காது எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen