Dienstag, 2. März 2010

அழிவின் அரியாசனத்தில் நீ! -கண்மணி

கொடுங்கோலனே!


இந்நாட்டில் சாபம் அனைத்தையும்

நீ ஏந்தி நிற்கிறாய்.

உன் ஆட்சியில்

நீதி விற்கப்படுகிறது.

உண்மை மிதிக்கப்படுகிறது.

உன் ஆட்சியில்

இயற்கையின் விதிகள்

தூக்கி எறியப்படுகின்றன.

அராஜகத்தின் குரல்கள்

உரக்க கேட்கின்றன.

அழிவின் அரியாசனத்தில்

நீ வீற்றிருக்கின்றாய்.

மாகவிஞன் ஷெல்லி கொடுங்கோலனை எதிர்த்து உரக்கப் பாடிய கவிதை வரிகள் இன்று மகிந்தாவுக்கு பொருத்தமாக இருக்கிறது. இலங்கையின் அரசியல் போக்கு புதிய புதிய பரிமாணங்களை தந்திருக்கிறது. அரசியலில் மகிந்தாவின் தள்ளாட்டம் உலக அரங்கிலே உணர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



கடந்த வாரத்தில் லண்டனில் புலிகள் ஆதரவு அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபேண்ட் கலந்து கொண்டதற்காக அவரை கண்டித்து, இலங்கையிலே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், போராட்டங்களும் நிகழ்த்தப்பட்டது. ஷெல்லி அந்த லண்டன் மாநகரிலே நின்று தான் மேற்கண்ட கவிதையை பாடினான்.இன்று டேவிட் மிலிபேண்ட் லண்டனில், புலிகள் இயக்கத்தின் ஆதரவு தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.



புலிகள் இயக்கம் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட போராளி இயக்கம் அல்ல. யாரெல்லாம் தமிழர்களோ, அவர்களெல்லாம் புலிகள் தான். புலிகளும் தமிழர்களும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. புலிகளின் எண்ணங்களில் என்ன இருக்கிறதோ, அதுதான் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களில் புதைந்திருக்கிறது. புலிகளின் வாழ்வியல், வரலாற்றியல், பண்பாட்டியல் கோட்பாடுகளும், தமிழர்களின் கோட்பாடுகளும் வெவ்வேறானவை அல்ல. தமிழர் என்கின்ற ஓர்மைப்பற்று அங்கே உயர்ந்தோங்கி காணப்படுகிறது.



ஆனால் இப்போது மாய்மாலம் செய்து கொண்டிருக்கும் மகிந்தா தமது தேர்தல் பரப்புரையை திட்டமிட்டு, பசப்புரைகளாக பாடி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தாம் பெருமளவில் வெற்றிவாகை சூடுவோம் என, வாய்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார். அது அவருடைய சொந்த விருப்பம். இந்த நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் சொல்வதென்பதும், முடியாத வாக்குறுதிகளை அள்ளி தெளிப்போம் என்பதும், அரசியலின் அழுகிப்போன ஒரு அம்சமாகிப் போய்விட்டது. ஆகவே இதில் அவர்கள் எப்படியாவது நடந்து கொள்ளட்டும். ஆனால் மகிந்தா பேசும் பேச்சு தான் நமக்கு வியப்பையும், நகைப்பையும் தருகிறது.



மகிந்தா கூறுகிறார், இலங்கையில் நமது கூட்டணி மீது மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நம்மால்தான் அவர்களுக்கு நல்லாட்சியை வழங்க முடியும் என்று உறுதியாக நினைக்கிறார்கள். இதை 1994ல் இருந்து நமக்கு ஆதரவளித்து, ஆட்சிப்பீடத்தில் அமரவைத்ததின் மூலம் அறியலாம்" என்கிறார். 94 முதல் ஆட்சி பீடத்தில் இவர் அமர்ந்திருக்க என்னதெல்லாம் செய்திருக்கின்றார் என்பதை இலங்கையின் அரசியல் ஆவணங்களை புரட்டிப் பார்த்தால் அவரின் புரட்டுகள் வெளிவரத் தொடங்கும். சரி. அது அவரின் இயல்பான போக்காக, ஒரு அராஜக அரசியல்வாதியின் தன்மையாக, உலக மகா நடிகனின் முகமாக இருந்துவிட்டு போகட்டும்.



அத்தோடு அவர் கூறியிருக்கும் மற்றொரு வார்த்தை தான் நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கிறது. மக்களின் கருத்துகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக இதுவரை தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தியுள்ளோம். வரும் காலத்திலும் இதில் மாற்றம் இருக்காது. இதை மக்களும் அறிவார்கள். இதனால்தான் நம்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதுவரை நமக்கு கிடைத்த வெற்றியைக் கண்டு நாம் நிறைவடைந்துவிடக் கூடாது. தொடர்ந்து நாம் மக்கள் நடுவில் நம்பிக்கையோடு நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப்பெற முயற்சிக்க வேண்டும். இந்த குறிக்கோளை நேர்மையான முறையில் அடைய முயற்சிக்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள கூடாது. அவர்களுக்கு எவ்விதத்திலும் நெருக்கடி அளிக்கக்கூடாது என்று தொடர்ந்து பேசியிருக்கிறார். இவர் எந்த காலத்தில் நேர்மையாக இருந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை.



இவரை எதிர்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவரது சொந்த இனத்தைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலர்களை சுட்டு வீழ்த்தினாரே அப்போதா? இல்லை தமக்கெதிரான கருத்து கூறுகிறார்கள் என்பதற்காக அவர்களை சிறையில் அடைத்தாரே அப்போதா? அதுவும் இல்லையென்றால் தமக்கெதிராக எவ்வித எதிர் கருத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு ஊடகவியலர்களை நாடு கடத்தினாரே அப்போதா? அவருக்கும் நேர்மைக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது. பொதுவாக அரசியல்வாதிகள் பொருத்தமற்று பேசுவதைத்தான் தமது பொதுமையாக வைத்திருக்கிறார்கள். ஆக, இந்த இலக்கணத்திற்கு மகிந்தா வேறுபட்டவரல்ல.



மகிந்தாவைக் குறித்து லசந்தா கூறும்போது, இலங்கை பிரச்சினையை பயங்கரவாத பூதத்தின் அடிப்படையில் மட்டுமே பார்க்காமல் வரலாற்று நோக்கிலும் இந்த பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி வருகிறோம். இத்தகைய கருத்துக்களுக்காக நாங்கள் தேச விரோதிகள் என்று முத்திரைக்குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசிய விரோதம் என்றால் அதை பெருமிதத்துடன் ஏற்கிறோம்" என்கிறார். இந்த காரணத்திற்காகத்தான் லசந்தா, மகிந்தாவின் மர்மப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.



இப்படியிருக்க இந்த சைவப் பூனை நீதியைக் குறித்து பேசுவது நமக்கு வியப்பாக இருக்காமல் வேறு எப்படி இருக்க முடியும்? ஷெல்லியின் வரிகளில் சொல்வதானால், இது கொடுங்கோலரின் ஆட்சி. இது நிலைக்கும் என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. உலகெங்கும் கொடுங்கோலர்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ஒருநாள் இந்த கொடுங்கோலனும் வீழ்த்தப்படுவான் என்பதிலே இருவேறு கருத்துக்கு இடம் இருக்கப்போவது கிடையாது. நமது உறவுகளுக்கு ஷெல்லியின் வரிகளை நம்பிக்கையாக தருகிறோம். சகோதர்களே! நாம் விடுதலைப் பெற்றுவிட்டோம். பசும்புல் தரைகளும், மலைகளும், கடற்கரை ஓரங்களும், காடுகளும், நீரூற்றுகளும், மகிழ்ச்சி ததும்பும் விடுதலை பெற்ற மக்களின் உறைவிடங்களாக மாறிவிட்டன.



ஆணையும் பெண்ணையும் கட்டிய அடிமை விலங்குகள் உடைத்தெறிந்து விட்டன. இதோ விரைவாக நமக்கான நாடு அமையப்போகிறது. நாம் மகிந்தாவைக் குறித்து சொல்கின்றோம். கொடுங்கோலர்கள் என்றும் ஆட்சி செய்வர் என்று அஞ்சாதே. ரத்த வெறி கொண்ட (சிங்கள இன வெறியர்கள்) பாதிரியர்கள் நிலைப்பர் என்று நம்பாதே. சாவு என்ற நதியின் அலைகளால் என்றேனும் அவர்கள் வன்மையாக அழிக்கப்பெறுவர். ஷெல்லிப் பாடிய இந்த கவிதை இன்றும், எப்போதும் நமது விடியலுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. நாம் ஒவ்வொருமுறையும் பேசும்போதும், மகிந்தாவின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கும் நமக்கும் கொடுக்கல் வாங்கல் சச்சரவா? இல்லை.



இது நம் இன விடுதலையை ஒடுக்க நினைக்கும் ஒரு கொடுங்கோலனுக்கு எதிரான சமர். இதில் எந்த காலத்திலும் நாம் தோற்கப்போவது கிடையாது. அதை தற்சமய மகிந்தாவின் அரசியல் போக்கு நமக்கு படம்பிடித்து காட்டுகிறது. தாம் வீழ்த்தப்படுவோம் என்பதை உணர்ந்த காரணத்தினால் பொய்யான செய்திகளால் இந்த மக்களை திசைமாற்ற மகிந்தா முயற்சி செய்கிறார். நீதியை குறித்து பேசுகிறார், நேர்மையை குறித்து பேசுகிறார், அடக்குமுறையை குறித்து பேசுகிறார். ஒட்டுமொத்தமாய் எமது மக்களை கொன்றொழித்தப்பின் தமது கரங்களில் உள்ள குருதி கறைகளையும், காற்றில் கலந்துள்ள பிண வாடைகளையும் அவர் திட்டமிட்டு மறைக்க முயற்சி செய்கிறார்.



ஆனால் நாம் குருதித் துளிகளில் இருந்துதான் நம் விடுதலைக்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். காற்று சுமந்துவரும் பிண வாடையே நமது விடுதலையை நம்மிடம் வேண்டி நிற்கிறது. எமது விடுதலை என்பது பெரும் இழப்பிற்கு பின் உறுதி செய்யப்படுகிறது. நாம் விடுதலைப் பெறுவதற்காக கொடுத்த விலை சாதாரணமானது கிடையாது. ஆகவே இழப்புகளிலிருந்தே பெறுவதை நாம் பகுத்தறிந்திருக்கிறோம். கிறித்துவர்களின் மதநூலான விவிலியத்தில் இயேசு கூறுகிறார், கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடிந்தால் ஒழிய பலன் தரமுடியாது" என்று.



நாம் ஆயிரக்கணக்கான கோதுமை மணிகளை பலன் தருவதற்காக வீர வித்துக்களாய் தமிழீழ மண்ணிலே புதைத்திருக்கின்றோம். ஒருபோதும் அது நமக்கு பலன் தராமல் போகாது. மோசடியான மகிந்தாவின் பேச்சுக்களை தமிழ் உறவுகள் நம்பி ஏமாற தயாராக இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டுமாய் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில தலைவர்கள் மகிந்தாவின் காலைச்சுற்றும் பூனையாக தமிழினத்தை அந்த சிங்கள வெறிப்பிடித்தவன் பாதங்களில் பதிவு செய்ய துடிக்கிறார்கள். ஆனாலும் உலகெங்கும் உள்ள மானமிக்க தமிழனும் தமக்கான மண்ணை அடையாமல் ஒருபோதும் ஓயப்போவது கிடையாது.



நாம் உலகைப் பார்த்துக் கேட்கிறோம். நாங்கள் காலூன்றி நிற்பதற்கு எங்கள் மண்ணைக் கொடுங்கள். இந்த உலகையே நாங்கள் அசைத்துக் காட்டுகிறோம். ஆம்! எமது ஆற்றலைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். எமது ஆளுமைக் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். எமது மதிப்பீடுகள் குறித்து நாம் தெளிவாக இருக்கிறோம். தமிழனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற இச்சமர் எங்கள் வாழ்வின் தொடக்கமாக அமையப்போகிறது. நாங்கள் வீழ்ந்ததிலிருந்து எழுந்து புதிய வரலாற்றை படைக்க புறப்பட்டிருக்கிறோம். இதில் எங்களுடைய நாடு எங்களுக்குரியதாக மாறப்போகிறது. எமது போராளிகள் இந்த மக்களிடம் இறுதியாக இப்படித்தான் ஷெல்லியின் வார்த்தைகளால் பேசி இருப்பார்கள். இதை நாமும் பின்தொடர வேண்டும்.

இங்கிலாந்து நாடே!

(தமிழீழமே)

விடைபெறுகிறேன்.

குழந்தையான எனக்கு நீ

தொட்டிலாக இருந்தாய்.

என்னுடைய கல்லறையாக

என்றுமே நீ மாறிவிடாதே.

உன்னிடமிருந்து பெற்றவற்றை

என்னுடன் எடுத்து செல்கிறேன்.

உன்னிடமிருந்து பெற்றசுதந்திரத்தை

கொடுங்கோலர்களின்

சிரிப்பிற்காக விற்றுவிடாதே
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen