Donnerstag, 4. März 2010

போர்க்குற்றவாளி நித்யானந்தா????

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடநாட்டுப் பெண் சாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தேன், தான் பாலுணர்வை வென்று விட்டதாகவும், தமது ஆசிரமத்தில் வாழும் எவரும் பாலுணர்வை வென்று இறையில் ஒன்றிக் கிடப்பதாகவும் அவர் வழக்கம் போல என்னிடம் ஆன்மீக வணிகம் செய்ய முனைந்தார், அவரிடம் நானும் வழக்கம் போலவே "உங்கள் இறைமார் அனைவரும் இல்லற வாழ்க்கையில் இன்புற்று இருக்கையில், உங்களை நீங்களே துன்புறுத்திக் கொள்ளும் இத்தகைய மாயைகளில் இருந்து விலகி குடும்பத்தாருடன் இணைந்து திருமணம் செய்து கொள்ள முயலுங்கள்" என்று சொல்லி விடை பெற்றேன், பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரே தொடர்பு கொண்டு, " நீங்கள் சொன்னது போலவே இந்த ஆசிரமத்தில் தவறான நிழல் வேலைகள் நடைபெறுகிறது", நான் மீண்டும் குடும்பத்தாருடன் இணையப் போகிறேன்" என்று சொன்னார், ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் இவரைப் போலவே ஆசிரமங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தங்கள் வாழ்க்கையின் பலவற்றை இழந்து இருண்ட மனக்குகைகளில் வாழும் எண்ணற்ற நம் நாட்டின் இளம் பெண்களை நினைத்துக் கவலை ஆட்கொண்டது.




பாலுணர்வு மனித வாழ்வின் அடிப்படை நாதம், உயிர் வாழ்தலுக்கு உணவு எப்படியோ அப்படியே மனம் வாழ்தலுக்குப் பாலுணர்வு, பாலுணர்வை வெல்வது என்பது நம்மை நாமே வருத்திக் கொள்ளும் ஒரு தற்குற்றம், எத்தகைய மனித ஆளுமைக்கும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தல் என்பது சமூக வேலிகளின் கட்டுக்குள் மட்டுமே நிகழக் கூடிய தன்னியல்பான உயிரியக்கம், சங்கராச்சாரியும் சரி, போப்பாண்டவரும் சரி, பாலுணர்வின் அடிப்படையில் ஒன்றானவரே, உயிரியக்கம் நிறுத்தம் பெறும் போதே பாலுணர்வு மனித உடலை விட்டுப் பிரிகிறது. இத்தகைய அறிவியல் உண்மைகளை உணர்ந்த யாரும் "பாலுணர்வை வென்றவனே இறைக்கு நெருக்கமானவன்" என்கிற புரளிகளை நம்பவும் முடியாது, அப்படிச் சொல்பவர்களின் பின்னால் செல்லவும் முடியாது. உலகியலைப் பற்றிய சரியான பார்வை உடைய யாரும் அவர் எந்தத் துறை சார்ந்தவராயினும் பாலுணர்வை வென்று விட்டேன் என்று சொன்னதில்லை, அப்படிச் சொன்னவர்கள் ஒன்று பொய் சொல்கிறார்கள், அல்லது உடலியல் வழியாக ஏதோ குறைபாடுடையவர்கள் என்பது மருத்துவர்கள் சொல்லும் உண்மை.



நித்யானந்தாவின் நிழல் உலகம் சொல்லும் உண்மையும் இதுதான், நித்யானந்தா ஒன்றும் யாரும் செய்யாத குற்றத்தைச் செய்து விடவில்லை, அவரோடு பாலியல் உறவு கொள்ள விருப்பம் கொண்ட ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறார், நித்யானந்தா உலகின் ஆசைகளை எல்லாம் கடந்தவர் என்று நம்பியதும், அவரது பின்னால் அணி வகுத்ததும் சமூகத்தின் குற்றம், கோடி கோடியாக ஒரு இளைஞனிடம் கொட்டிக் கொடுப்பதற்கு முன்னாள் கேள்விகள் எதுவும் கேட்காத நமது சமூகம் ஊடக வெளிச்சத்திற்கு அவர் வந்த பின்பு ஒரே நாளில் பல்லாயிரம் கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது, நமது கேள்விகளுக்கு அவரிடம் இருக்கும் ஒரே பதில் இதுவாகத் தானிருக்கும், " நானும் உங்களைப் போலவே ஒரு மனிதன், எனக்கும் தனி மனித ஆசைகள் இருக்கும்".



நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகளுக்குப் பின்னால் சராசரி மனிதனின் பாலுணர்வு எச்சங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கிறது, அவனை தெய்வப் பிறவியாக்கிய சமூகம் வழக்கம் போலவே தங்கள் படுக்கையறைகளில் விழுந்து கொண்டு அடுத்த நித்யானந்தாவைக் குறி வைத்தபடி உறவு கொண்டிருக்கிறது, மிகப் பெரிய மனித அழிவுகள் நிகழ்ந்த போது அனுப்பப்பட்ட ஆவணக் காட்சிகளை சீண்டிப் பார்க்காத தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் இத்தகைய கிளு கிளு காட்சிகளை மாறி மாறி மறு ஒளிபரப்புவதில் கவனம் செலுத்துகின்றன, இனி தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு நம் சமூகமும் நித்யானந்தாவின் படுக்கையறைகளுக்குள் ஊடகங்கள் நுழைய முடியாத மூலை முடுக்குகளை எல்லாம் ஆராயத் துவங்கி விடும், நமது சமூகத்தின் உடனடித் தேவையான ஈழ மக்களின் பல்வேறு சிக்கல்களையும், அன்றாட வாழ்வில் பொது மனிதனைப் பாதிக்கும் பல்வேறு சிக்கல்களையும் பின்னுக்குத் தள்ளி ஊடகங்களின் படுக்கையறை வணிகம் செழித்து வளரும்.



தனி மனிதர்களின் பின்னால் அதுவும், மன முதிர்ச்சி அற்ற ஒரு இளைஞனின் பின்னால் மதத்தின் பெயராலும், ஆன்மீகத்தின் பெயராலும் அணிவகுக்கும் நமது சமூகம் தான் குற்றவாளி, ஊடகங்களுக்கான பணிகளை வகைப்படுத்திக் கொடுக்கத் தெரியாமல், நடிகர்களின் பின்னாலும், சாமியார்களின் படுக்கையறைகளைக் குறி வைத்தும் அவர்களைச் செலுத்திக் கொண்டிருக்கும் நானும், நீங்களும் தான் குற்றவாளி, ஒரு கேள்வியும் கேட்காமல் இத்தகைய சாமியார்களின் காலடிகளில் விழுந்து வணங்கி மோசமான முன்னுதாரணங்களை விட்டுச் சென்றிருக்கும் குடியரசுத் தலைவர்களும், இந்திய தேசியத் தலைவர்களும் குற்றவாளிகள்.



இன்றும் இலங்கையின் கொடும் சிறைகளில் கதறக் கதறக் கற்பழிக்கப்படும் எம்மினத்தின் பெண்களைக் காக்க எந்த வழியுமின்றி வாய்மூடி மௌனித்து வாளாயிருக்கும் இந்தச் சமூகம் நித்யானந்தாவின் மீது காட்டும் ஆர்வம், எத்தகைய மன வக்கிரம் நிறைந்த ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது. நித்யானந்தாவின் மீது காட்டப்படும் ஆர்வம் ஊடக வன்முறை சார்ந்தது, வன்புணர்ச்சி குறித்த எண்ணற்ற வழக்குகள் பதிவாகும் ஒரு சமூகத்திற்கு இத்தகைய நெறி ஒழுக்கம் குறித்த விவாதம் செய்யத் தகுதி இல்லை, அதற்கான தேவையுமில்லை, புகைப்படக் கருவிகள் நுழைய முடிந்த ஒரு நித்யானந்தாவின் படுக்கையறை வெளியில் தெரிந்து விட்டது, வெளியே தெரியாத எத்தனையோ நித்யானந்தாக்கள் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு சமூகத்தின் பாதுகாப்பில் சுக வாழ்வு வாழ்வதை எந்தத் தொலைக்காட்சியும் படம் பிடிக்க இயலாது.



எத்தகைய விசாரிப்புகளும் இல்லாமல், நித்யானந்தாக்களின் அருள் மொழிகளைத் தொடராக வெளியிட்டுப் பணம் செய்த அதே ஊடகங்கள், அவர்களின் படுக்கையறைகளில் நுழைந்து பணம் பண்ண முயற்சி செய்கிறார்கள், ஆன்மீக வணிகமோ, இல்லை, பாலியல் வணிகமோ கிடைக்கும் நலன்கள் அனைத்தும் ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு மட்டுமே, விளையும் தீமைகள் அனைத்தையும் கடந்து இன்னொரு நித்யானந்தாவை அறிமுகம் செய்வதில் நமது ஊடகங்கள் தவறப் போவதும் இல்லை, இத்தகைய சமூகக் குற்றங்களைக் களைவதற்கும், கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும் நாம் தயாராவதும் இல்லை.



வாழும் சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவாறு பயணிக்கிற எந்த ஒரு மனிதனும் துறவிகளை விடவும் மேலானவன், மனங்களைப் பண்படுத்துகிற நல்வார்த்தைகளைப் பேசத் தெரிந்த சக மனிதன் மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றும் ஆன்மீக வாதிகளை விடவும் மேலானவன், ஊரெங்கும் விளம்பரங்களில் சிரித்து மயக்கும் காவி உடை வணிகர்களை விடவும், போலியற்ற புன்சிரிப்பை வழிப்போக்கில் வழங்குபவன் மேலானவன். இனியாவது நித்யானந்தாக்களை உருவாக்காத சமூகமாக நாம் இருப்போமா?



சோமாலிய முன்னாள் பிரதமர் முஹம்மத் அலி சமந்தர் மற்றும் இந்நாள் இலங்கையின் அதிபர் மஹிந்த ராஜபக்ஷே பற்றிய போர்க்குற்ற ஒப்பீட்டுக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் நுழைந்த நானும் குற்றவாளி தானோ?????
  • மேலதிக செய்திகளுக்காக
  • 1 Kommentare:

    Anonym hat gesagt…

    உங்களது இந்த கட்டுரை மிகவும் தரமானதாக இருக்கிறது. மக்களுக்கு மனமுதிர்ச்சி இல்லாததால் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது.

    Kommentar veröffentlichen