இலங்கையில் அடுத்த மாதம் நடக்க இருக்கின்ற பொதுத் தேர்தல் உலக அரங்கில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் களம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து இன்று எதிர்பாராத நிலையை அடைந்திருக்கிறது. உலக அரங்கில் இந்த தேர்தலை எதிர்மறை, நேர்மறை கூற்றோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட மகிந்தா, நடக்க இருக்கின்ற தேர்தலிலும் தம்மை அங்கீகரித்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மக்களவை தேர்தலிலும் தமது வெற்றியை நிலைநாட்டி, இலங்கையை தமது ஏகபோக அதிகாரத்திற்கு கொண்டுவர ஒவ்வொருநாளும் அவர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்.மக்களவை தேர்தலோடு அவருடைய நடவடிக்கை நிற்கப்போவது கிடையாது. தொடர்ந்து வடக்கு மாகாண தேர்தலையும் நடத்தி, கிழக்கு மாகாணத்தை பிள்ளையான் என்னும் ஒரு தமிழ் துரோகியிடம், சிங்கள அடிமையிடம் ஒப்படைத்ததைப் போன்று வடக்கையும் அப்படி ஒரு பொம்மை அரசிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடு இந்த தேர்தல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் தமிழர்களுக்கு எந்த விதத்திலாவது நன்மை பயக்குமா? என்ற கேள்வி எழுமானால் அறுதியிட்டுச் சொல்லலாம், நிச்சயமாக கிடையாது.
கடந்த ஆண்டு இந்த நாட்களிலெல்லாம் தமிழீழ மக்களின்மீது ஒரு பாரிய தாக்குதலை நிகழ்த்தி, இனஅழிப்பை முன்னிலைப்படுத்திய மகிந்தா, தமது ராணுவ வெற்றியை மையப்படுத்தியே தேர்தல் நடத்துவதற்கு காலங்கள் இருந்தபோதுகூட, இனவெறியோடு அதிபர் தேர்தலை நடத்தி, அதில் வெற்றியும் பெற்று, தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத்தை சிறையிலும் அடைத்து, தான் இந்த நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதி என்பதை பிரகடனப்படுத்தி இருக்கிறார். மகிந்தா பெற்ற இந்த வெற்றிகளை எல்லாம் விட, ஒரு மாபெரும் வெற்றி மகிந்தாவுக்கு கிட்டியிருக்கிறது. அது தமிழ் தேசிய கூட்டணியை சின்னாபின்னமாக்கியது. இன்று பிளவு பட்டிருக்கும் தமிழ் சமூகத்தை ஒற்றுமை படுத்துவதற்கான தன்மையை எப்படி எடுப்பது என்பது புரியாமல் இனஉணர்வாளர்கள் இந்த இனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
திரு.குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரக்குமார் மற்றும் அவருடன் சேர்ந்து பல முன்னணி தமிழ் தேசிய உறுப்பினர்கள், கூட்டணியிலிருந்து விலகி, தமிழ் அமைப்புகள் மீது கடும் விமர்சனங்களை வைப்பதே மகிந்தாவின் வெற்றிக்கு தொடக்கமாக அமைந்துவிட்டது. ஆக மகிந்தா, வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், திட்டமிட்டு தமது வெற்றியை தக்கவைத்துக் கொண்ட மகிந்தா, தமிழர்களை அல்ல, தமிழ் இனத்தை தோற்கடிப்பதற்கான அனைத்து நகர்வுகளையும் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, இன அடையாளங்களை அழித்தொழிக்க, தமிழ் பூமியை சிங்கள மயமாக்கும் தன்மைக்கு அவர் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழீழ மக்களின் கலாச்சார கோட்டையான யாழ்பாணத்திற்கு அணி வகுக்கும் சிங்கள மக்களின் எண்ணிக்கையே இதற்கு பெரும் சாட்சியாக இருக்கிறது. அதோடு இல்லாமல், யாழ்பாணத்தில் உள்ள கல்லூரிகளில் தமிழ் மாணாக்கருக்கு சிங்களம் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது. அவர்கள் நினைத்ததைப் போலவே முதலில் மொழியை அழிப்போம், பின்னர் இனத்தை அழிப்போம் என்ற கோட்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இப்படி ஒரு இனத்தின் உயிர் ஆதாரமான மொழி கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நிலையில், தமிழர்களின் ஒற்றுமை நிலைகுலைந்து போயிருப்பது தமிழீழ தேசியத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு என்பதை நாம் மறுக்கமுடியாது.
இதை மாற்றுவதற்கு இனியாவது பணியாற்ற வேண்டிய ஒரு கட்டாயம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உண்டு என்பதை நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த நிலை தொடருமேயானால் 1956ஆம் ஆண்டிலிருந்த மீண்டும் ஒரு கசப்பான வரலாறு தொடங்குவதற்கான வாய்ப்பை இந்த நகர்வுகளே உருவாக்கித்தரும் என்பதை வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும். எப்படி முன்னொரு காலத்தில் தமிழர்கள் மிகக் கேவலமாக சிங்கள இன வெறியர்களால் தாக்கப்பட்டார்களோ, அதே நிலை மீண்டுமாய் உருவாக இந்த தேர்தலில் தமிழ்தேசிய தலைவர்கள் தன்னலத்தோடு எடுத்த தமது தன்னலம் நிறைந்த நிலைப்பாடே காரணமாக அமையப்போகிறது. தமது சொந்த இனத்திற்கு அவர்களுக்கே தெரியாமல் துரோகம் செய்கிறார்கள்.
தமக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க முனைகிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இப்போது உலக அரங்கில் ஏதிலிகளாய் வழும் தாயக உறவுகள் தமது நிலைப்பாட்டை மிக அழுத்தமாக பதிவு செய்து, வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி எமக்கான ஒரு நாடு என்பதிலே தெளிவாக செயல்பட தொடங்கியிருக்கும் இத்தருணத்தில், இப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து, ஒற்றுமையின்றி இருப்பது நமக்குள்ளே ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒற்றுமையாக நின்று தமது ஒட்டுமொத்த வாக்குகளை இனவெறியன், தமிழரின் குருதி குடித்த மகிந்தாவின் இனவெறி தன்மைக்கு எதிராக திருப்புவதை தவிர்த்து, வாக்குகளை சிதறடிப்பதின் மூலம் மகிந்தாவின் வெற்றிக்கு வழிவகுக்கும் இந்த தலைவர்கள், எந்த அளவிற்கு தமது நாட்டின் மீதும், தமது நாட்டின் மக்கள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி நம் முன் விஸ்வரூபமாய் எழுந்து நிற்கிறது.
இது ஒருபுறம் என்றால், வேறொருபுறம் நாம் யாராண்டாலும், எவ்வித சலனமும் இல்லாமல் மண் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி இருப்பது இந்த காலக்கட்டத்திற்கு ஏற்புடையதல்ல. இந்த நேரத்தில் நம்மை நாம் கூர்தீட்டி, உறுதிபடுத்திக் கொண்டு, களம்காண நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம். இந்நேரத்தில் எமக்கென்ன என்று இருப்பதே நமது எதிரியை வெற்றிபெற செய்வதற்கு பெரும் துணை புரியும் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது வாக்குகளை ஒருமைப்படுத்தி, தமிழர்கள் தமது இன அடையாளத்தை மட்டுமல்ல, தமக்கான லட்சியத்தையும், உறுதியையும் விட்டுவிடவில்லை என்பதை அடித்துக் கூறுவதற்கான களமாக இத்தேர்தல் களம் அமையவேண்டும்.
ஆக, தமிழர்களின் வாக்குகள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு அது சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக திருப்பப்பட வேண்டும். அது, தமிழ் தேசியத்தை தமிழர்களுக்கான தேசிய அடையாளத்தை ஓங்கி குரல் கொடுப்பதாய் அமைய வேண்டும். மாறாக, நம்மை நாமே பிளவுப்படுத்திக் கொள்வதென்பது நமக்குள்ளிருக்கும் இன அடையாளத்தை ஒழிப்பதற்கு பல்லாண்டு காலமாக நாம் போராடி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கி, வெடித்து சிதறிப்போன உயிர்களை, இந்த தேச விடுதலைக்காக உவப்போடு ஈந்த அனைத்து செயல்களும் அர்த்தமற்றதாகிவிடும். மேலும் அப்படி இந்த நாட்டின் விடுதலைக்காக, இந்த நாடு ஒரு எழுச்சிப்பெற்ற, மகிழ்ச்சி நிறைந்த, விடுதலை உணர்ச்சிக் கொண்ட, தன்னிறைவு பெற்ற, தனித்தன்மை வாய்ந்த நாடாக அமைய வேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணித்த எண்ணற்ற அந்த ஈகப்போராளிகளுக்கு, நாம் திட்டமிட்டு துரோகம் செய்ததை வரலாறு பதிவு செய்து வைக்கும்.
இது எந்த காலத்திலும் அழிக்க முடியாத சுவடாக மாறிப்போகும். ஆகவே நாம் இந்த தேர்தல் களத்திலே சிந்திக்க வேண்டியது எதுவுமே கிடையாது. ஒரே ஒரு செய்திதான். அது, நமது ஒற்றுமை. தமிழர்களின் வாக்குகள் அனைத்தும் ஒரே குடையின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அது மகிந்தாவிற்கு மரண ஓலையாக அமைய வேண்டும். தவிர்த்து, நாம் மாவீரர்களை அவமானப்படுத்தும் செயலை செய்வது சரியல்ல என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் இந்தியா, தமிழர்களின் வாழ்வுக்கும் அவர்களின் விடுதலைக்கும் உறுதுணைப்புரியாது என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
ஆனாலும்கூட அடிப்படையில் அகண்ட பாரத கனவும், அடிப்படையற்ற தேசியமும், இந்தியாவின் புற்றுநோயாய் புதைந்துபோயிருக்கிறது. ஆகவே இந்த தேர்தலில் இருவேறு நிலையில் தேசிய இனங்கள் முரண்பட்டு இருப்பதுதான் இந்தியாவிற்கு பெரும் லாபம். தமிழ்நாட்டிலும்கூட, தமிழர்கள் தமக்கான அடையாளத்தை இழந்து, தம்மை ஒரு கட்சியின் அடையாளமாக உருமாற்றிக் கொண்டு தமிழருக்கான தேசியத்தையும், தமிழரின் வாழ்வுரிமையையும் நசுக்கி, சாறுபிழிந்து கொண்டிருக்கிறார்கள். இது நமது இனத்தை நாமே அழிப்பது, கண்ணாடி வீட்டுக்குள்ளிலிருந்து கல்லெறிவது என்கின்ற அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி இருக்கிறது. இதுதான் இந்தியா என்ற பார்ப்பன-பனியா வல்லரசு விரும்புகிறது.
இந்திய நாட்டின் எண்ணமெல்லாம் ஒன்றுதான். இலங்கையில் தமிழீழ தேசியம் வலுவாகி, தமிழீழ தேசிய குடியரசு உருவாகிவிட்டால், அது இந்தியாவிற்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ! இந்தியாவின் விருப்பமின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமோ! என இந்தியா சிந்திப்பதால் நிச்சயமாக அது இலங்கையிலே தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நகர்வை முன்வைக்காது. இந்திய நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவின் கனவு, இந்திய பெருங்கடலை தமது பேராதிக்கத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆக, இந்த நிலையோடு இருக்கும் இந்தியா, நிச்சயமாக தமிழ் தேசியத்தின் முரண்பாட்டுத் தன்மையை இன்னும் கொஞ்சம் தமது உளவுப்பிரிவின் மூலம் அதிகரிக்கச் செய்யுமே தவிர, தமிழரின் ஒற்றுமைக்கு அது துணைபுரியாது.
ஆகவே, தமிழர் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தருணம் இது. உலகத்திற்கு தமிழர்கள் தரும் செய்தி, நாங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றோம், எங்களுக்கான நாட்டை அடையும்வரை நாங்கள் இந்த ஒற்றுமையிலிருந்து பிளவுப்பட மாட்டோம் என்று கூறுவதாக அமைய வேண்டும். இல்லையெனில் நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது வாசித்தோமே, அதே கதைபோல் தான் இதுவும் நிகழும்.
ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தது. அந்த காட்டிலே இருந்த சிங்கம், அந்த எருதுகளை கொன்று சாப்பிட முயற்சி செய்தது. ஆனால் ஒன்றுபட்ட எருதுகள் அந்த சிங்கத்தை விரட்டி அடித்தது. சிங்கம் ஒரு தந்திரம் செய்தது. ஒரு நரியை (நீங்கள் கருணா, டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்களை நினைத்துக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது) அனுப்பி அந்த எருதுகளை பிரித்தாள முயற்சித்தது. நரியும் எருதுகளிடம் சென்று மிகவும் பசுமையான புல் தரையில் நீங்கள் சேர்ந்து புல்லை புசிப்பதால் ஒருவர் அதிகமாக சாப்பிடுகிறீர்கள், உனக்கு தெரியாமல் அவர் அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்.
ஆகவே அங்கே பாருங்கள், நீங்கள் தனித்தனியாக சாப்பிட்டால் வயிறு புடைக்க சாப்பிடலாம். நிறைவாக இருக்கலாம் என்று ஆசைக்காட்டியது. எருதுகளும் நரியின் தந்திரம் புரியாமல் தனித்தனியே பிரிந்து புல்லை மேயத் தொடங்கின. சிங்கம் வந்தது. தனித்து நிற்கும் ஒவ்வொரு எருதையும் கொன்று சாப்பிட்டது. இறுதியில் நான்கு எருதுகளும் இறந்து போயின. சிங்கம் கொழுத்துப்போனது. இந்த கதை நமது தமிழர் தலைவர்கள் தமக்கு முன்னாலேயே வாசித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen