ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி நடத்து வரும் போராட்டங்களில், அதிர்ச்சி தரும் வகையில் நேற்று மாணவர் ஒருவர் தீக்குளித்தார். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இச் சம்பவத்தில், காயமடைந்த மாணவர், காவல்துறையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தெலுங்கானாப் போராட்டங்கள் சற்றுத் தணிந்திருந்த நிலையில், மத்திய அரசின் அறிவிப்பினால், கடந்த வாரம் முதல் மீண்டும் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழக வளாகத்திலிருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள், நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் சட்டசபையை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆயினும் மாணவர்களின் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. இதனால் ஆத்திரமுற்ற மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் நிலை உச்சக்கட்டமடைந்திருந்த நிலையில், யாரும் எதிர்பாரா வகையில், ஒரு மாணவர் திடீரென உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில், பல்கலைக் கழக வளாகத்தில், 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷமிட்டபடி இங்குமங்கும் ஓடினார். அங்கிருந்த பொலிஸாரில் சிலர் அவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகளவு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மாணவர், பத்தொன்பது வயதுடைய பிளஸ் டூ மாணவன் எனவும் அவரது பெயர் யாதையா எனவும் அறியப்பட்டிருக்கிறது.
தீக்குளிப்பதற்கு முன்னதாக இம் மாணவர், தான் ஒரு அனாதை எனவும், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து விட்டேன். தனி தெலுங்கானா மாநிலம் உருவாகினால், தனக்கு வேலை கிடைக்கும் என நம்பியதாகவும், ஆனால் தெலுங்கானா கோரிக்கையை, மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவோ, நிறைவேறுவதாகவோ தெரியவில்லை எனவும், ஆகவே தெலுங்கானா மாநிலம் உருவாவதற்காக தனது உயிரை தியாகம் செய்வதாகவும், குறிப்பு ஒன்றினை எழுதிவைத்திருந்நததாகவும் தெரியவுருகிறது.
யாதையாவின் மரணம் இன்று காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுடன் பொது மக்கள் பலரும் ஆர்பாட்டங்களில் இணைந்து கொண்டுள்ளதாகவும், ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen