Freitag, 26. Februar 2010

சப்-இன்ஸ்பெக்டரை கத்திரிக்கோலால் குத்தி கைதி தப்ப முயற்சி

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.




கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 26). பிரபல ரவுடியான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் போலீஸ் பிடிக்க முயன்றபோது ஒரு பெரிய மதில் சுவர் மீது ஏறி தப்ப முயன்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்த ஹரியின் கால் எலும்பு உடைந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரியில் கடந்த 23-ம் தேதி சேர்க்கப்பட்டார். டவர் பிளாக் 2-ல் உள்ள அறை எண் 205-ல் இவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.



அவருக்கு பாதுகாப்புக்காக போலீசாரும் இருந்தனர். மேலும் அதே அறையில் வேறு சில நோயாளிகளும் சிகிச்சை பெற்று வந்தனர்.



இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் நர்சு ஒருவர் ஹரியின் பக்கத்து படுக்கையில் படுத்திருந்த நோயாளியின் கால் கட்டுக்களை அவிழ்த்து சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.



அப்போது திடீரென நர்சின் மேல் பாய்ந்த ஹரி அவரிடம் இருந்த கத்திரிக்கோலை பறித்தார். பின்னர் அதை வைத்து அனைவரையும் மிரட்ட ஆரம்பித்தார். ``யாரும் கிட்டே வராதீர்கள் வந்தால் குத்தி விடுவேன்'' என்று மிரட்டல் விடுத்தார்.



இதனால் பயந்து போன டாக்டர் மற்றும் நர்சுகள் அந்த அறையில் இருந்த நோயாளிகளை அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக அவசர போலீஸ் எண் 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.



உடனடியாக பூக்கடை போலீஸ் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஹரியுடன் நைசாக பேசியபடி கத்திரிக்கோலை பறிக்க முயற்சி செய்தார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயலால் ஹரி ஆத்திரம் அடைந்தார். திடீரென அவர் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் சப்-இன்ஸ்பெக்டரின் இடது மார்பில் குத்தினார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார்.



இதை கவனித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சப்-இன்ஸ்பெக்டரை வெளியே இழுத்து அவருக்கு முதலுதவி அளித்தனர். கத்திரிக்கோல் சப்-இன்ஸ்பெக்டரின் இதயப்பகுதியில் குத்தப்பட்டதால் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் பூக்கடை துணை கமிஷனர் சண்முகவேல் மற்றும் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் போலீஸ்படையுடன் அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். ரவுடி ஹரி அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை எண் 205-க்குள் நுழைந்தனர். உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஹரியின் கையில் இருந்த கத்திரிக்கோலை பறிக்க முயன்றார்.



அப்போது நடந்த போராட்டத்தில் ராதாகிருஷ்ணனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. ஸ்டாலின் (34) என்ற போலீஸ்காரருக்கு கண்ணில் காயம் பட்டது.



கடுமையாக போராடி ரவுடி கையில் இருந்த கத்திரிகோல் பறிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து அவரது கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது. உடனடியாக ரவுடி ஹரி ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.



இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், போலீஸ்காரர் ஸ்டாலின் ஆகியோருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது.



இந்த சம்பவம் குறித்து பூக்கடை துணை கமிஷனர் சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-



ரவுடி ஹரி தப்பிச் செல்லும் முயற்சியோடு இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தனது உயிரை துச்சமாக மதித்து போராடி அவன் தப்பி செல்லவிடாமல் தடுத்துள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கத்திரிக்கோலால் இடது மார்பில் குத்தப்பட்டார். படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முதலில் ஆபத்தான நிலையில் இருந்தார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரவுடி ஹரி மீது தனி வழக்கு பதிவு செய்யப்படும். இது தொடர்பாக அவன் கைது செய்யப்படுவான்.



இவ்வாறு அவர் கூறினார்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen