சீமான், கொளத்தூர் மணி, வேல்முருகன் ஆகிய கடுங்கோபக்காரர்கள் மூன்று பேர் சேர்ந்து உதை குத்து சம்மேளனத்தை ஆரம்பித்தால் ரணகளத்துக்குக் கேட்கவா வேண்டும்! செவி கிழியும் அளவுக்கு சேலத்தில் உதை விழுகிறது. முகம் நொறுங்கும் அளவுக்கு கடலூரில் குத்து இறங்குகிறது. என்னவாம் இந்த தமிழ்த் தேசியவாதிகளுக்கு என்ற கேள்வியைச் சுண்டிவிட்டால், ''தமிழனின் பாரம்பரிய வீரம் பட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்'' என்று சிரித்தபடி பதில் தருகிறார்கள்.
கடலூர் ஆயுதப் படை மைதானத்தில் இளம் நீல நிற பனியன் அணிந்த இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இரண்டு அணியினரையும் கைகளைப் பிடித்து பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆரம்பித்துவைத்ததுதான் தாமதம். அரை மணி நேரத்துக்கு யார் உதை வாங்கியது, யார் திருப்பிக் கொடுத்தது என்று தெரியாத அளவுக்குக் கடுமையான சண்டை. முடிந்ததும் சிலம்பம். அடுத்து சுருள்வாள் என்று அத்தனையும் அசைவ வகையறாக்கள். இந்த அமைப்புக்குத் தலைவர், 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான். காப்பாளர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மாநில ஒருங்கிணைப்பாளர், பா.ம.க. அமைப்புச் செயலாளர் வேல்முருகன். மேட்டூரைச் சேர்ந்த பிரபல கிக் பாக்ஸிங் வீரர் சிவபெருமானைப் பயிற்சியாளராக நியமித்திருக்கிறார்கள்.
''ஒரு கிளைக்கு 100 வீரர்களையாவது உருவாக்குவது இப்போதைய திட்டம். கிக்பாக்ஸிங், தமிழனின் கலை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மா, இந்த தற்காப்புக் கலையைக் கண்டுபிடித்தவர். அவர்தான் இங்கே இருந்து வெளிநாட்டுக்கு இந்தக் கலையைக் கொண்டுபோனார். வெளிநாட்டுக்காரர்கள் இதில் தேறிவிட்டார்கள். ஆனால், நம்மில் ஒருவர்கூட ஒலிம்பிக்கில் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு முன்னேறி வரவில்லை. அதனால்தான் நான் பயிற்சி கொடுத்துட்டு வர்றேன்'' என்கிற சிவபெருமான், கராத்தேவுக்காக மூன்று முறையும், கிக்பாக்ஸிங்கில் இரண்டு முறையும் அகில இந்திய அளவில் பதக்கங்கள் வாங்கியவர்.
இவரைக் கண்டுபிடித்தவர் கொளத்தூர் மணி. ''30 ஆண்டுகளுக்கு முன்னால் 'வெண்தாடி வேந்தர் உடற்பயிற்சிக் கழகம்' வைத்து, தோழர்களுக்கு வீரக் கலைப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தோம். காலப்போக்கில் அது நின்று போனது. மீண்டும் இப்போது ஆரம்பித்து இருக்கிறோம்!'' என்கிறார்.
''எங்கள் ஊர் கிராமத்துப் பொங்கல் விழாவில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் விளையாட்டுக்களை நடத்தி வருகிறேன். நல்லொழுக்கங்களைக் கற்றுத்தரக்கூடிய பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். அதன் அடுத்த கட்டமாகத்தான் கிக்பாக்ஸிங் பயிற்சி. இதை நடத்துபவர்கள்தான் அரசியல்வாதிகளே தவிர, அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்துத் தமிழனின் வீரத்தை, பழம் பெருமை பேசினால் மட்டும் போதாது. அதை மீண்டும் பெற தமிழர்கள் அனைவரும் உடலால் பலம் பெற வேண்டும். சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு மட்டும் அல்ல; சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் மனிதர்களாகவும் தமிழர்கள் மாற வேண்டும்'' என்கிற எம்.எல்.ஏ. வேல்முருகனிடம், ''அரசியல் உள்நோக்கம் இருப்பது போலத் தெரிகிறதே?'' என்றோம்.
''கிக்பாக்ஸிங் பயிற்சி பெற்ற ஆயிரம் பேரைத் தயாரிப்பதும், வரும் ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய போட்டியை நடத்துவதும்தான் எங்களது திட்டம். அடுத்த ஒலிம்பிக்கில் தமிழன் ஒருவன் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்பது எங்களது ஆசை. மற்றபடி யார் எந்த விமர்சனம் வைப்பது பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை'' என்கிறார்.
சீமானிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சிறு வயதில் இருந்தே கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்றவன் நான். தன்னம்பிக்கை இதனால் வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற தைரியம் வரும். நம் தலைமுறைப் பிள்ளைகள் இந்தக் கலைகளைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழகம் முழுவதும் படிப்பகம் ஆரம்பிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல உடற்பயிற்சிக் கழகங்களை அமைக்கவும் 'நாம் தமிழர் இயக்கம்' திட்டமிட்டு உள்ளது'' என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போடுகிறார்!
0 Kommentare:
Kommentar veröffentlichen