Freitag, 4. Dezember 2009

சிறிலங்கா படையினருக்கு சீன உதவி தொடருமாம்: தூதர் உறுதி


சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கவும், படைகளுக்குப் போர்-சார்ந்த உதவிகளை வழங்கவும் சீனா உறுதியளித்துள்ளது.


சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் சிறிலங்காவுக்கான சீனத் தூதர் யங் சுபிங் [Yang Xiuping] இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் சீனாவோடு இராணுவம்-சார்ந்த மற்றும் பொருளாதார ரீதியிலான மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருவது வெளிப்படையான விடயம்.


அவற்றின் காரணமாக - சிறிலங்காவில் ஒர் ஆட்சி மாற்றத்தை இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் விரும்புவதாகக் கருதப்படுகின்றது.

அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே - நடைபெறவிருக்கும் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முயற்சிகளுக்கு இந்தியாவும் மேற்குலகும் ஆதரவாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

இத்தகைய சூழலில் - சீனத் தூதுவருக்கும் சிறிலங்கா தரைப் படைத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்திருப்பதும், தொடர்ந்தும் போர்-சார்ந்த சீன உதவிகள் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதும் ஒரு முக்கிய விடயமாக அவதானிகள் கருதுகின்றனர்.

இந்தச் சந்திப்பின் போது - இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியமர்வு விடயம் பற்றியும் சீனத் தூதர் ஜங் சுபிங், லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் விசாரித்து அறிந்து கொண்டாராம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen