அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தனது சகோதரருக்காக தேர்தல் சட்ட விதிறைகளை மீறி பிரசாரங்களை முன்னெடுத்து வரும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் ஆணையாளர் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் தலைவரும் எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பேச்சாளருமான மங்கள சமரவீர கேள்வி எழுப்பினார்.
எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது உறவினர்களுக்கு சேறு பூசும் வகையில் அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். இருப்பினும் அந்த சட்டம் அரச அதிகாரத்தின் கீழ் உள்ளதால் உரிய நியாயம் கிடைப்பதில் சந்தேகமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று பிற்பகல் கொழும்பு றோயல் வீதியில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது: குடும்ப நிர்வாகத்தின் கீழ் சிக்குண்டுள்ள நாட்டை ஜனநாயகத்தின் வழியில் இட்டுச் செல்வதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமான இரண்டாம் கட்ட நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு சில தினங்களில் தேர்தல் ஆணையாளனால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் அரசாங்க அதிகாரிகள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறினால் அது தேர்தல் விதிறையை மீறிய செயலாகக் கருதப்படும் என்றும் அந்த சுற்றறிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்புச் செயலாளர், தனது சகோதரருக்கான தேர்தல் பிரசாரங்களை அரச ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்து வருகின்றார். அவருடைய இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்டவிதிறைகளை மீறியதாகும். இதற்கு எதிராக தேர்தல் ஆணையாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்?.
வெள்ளை வான் கலாசாரத்துக்கு தலைமை வகித்தவர், அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது இந்த நடவடிக்கை இரகசியமானதொன்றல்ல, அனைவரும் அறிந்த விடயமே என்று அறிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் அவர் அந்தப் பேட்டியின் போது சுட்டிக்காட்டியுள்ளார். பிறிதொரு குற்றச் செயலைப் புரிந்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தாமல் மறைத்து வைத்திருக்கும் செயலானது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியதொன்றாகும்.
அவர் அவ்வாறானதொரு தகவலை வெளியிட்டுள்ள நிலையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் இது தொடர்பில் எந்தவொரு வாக்குமூலத்தினையும் பெறவில்லை. விசாரணை நடத்தவும் இல்லை.
இதே பிழையை வேறு எவரேனும் செய்திருந்தால் அடுத்த நொடியே அவர்களைத் தேடி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றிருப்பர். இவ்வாறானதொரு நிலையில் பொலிஸாரிடம் நாம் கேள்வியொன்றை எழுப்புகின்றோம். இத்தகையவருக்கு எதிராக பொலிஸார் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
இதேவேளை பொலிஸ் ஆணைக்குழுவொன்று தேவையில்லை என்றும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடைய இந்தக் கூற்று அரசியலமைப்பை மீறியதாகவே அமைகின்றது. காரணம். பொலிஸ் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயமாகும்.
இவ்வாறாக தனது சகோதரரின் வாயிலாகப் பெற்றுக் கொண்ட அதிகாரங்களை முறையற்ற வகையில் செயற்படுத்தி வரும் பாதுகாப்பு செயலாளர் குற்றவியல் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைச் சட்டம் போன்றவற்றை மீறி செயற்பட்டு வருகின்றார்.
அழிவை நோக்கிக் கொண்டு செல்லும் குடும்ப அரசியலிலிருந்து நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்.
கேள்வி : ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போது ஆயுதக் கொள்வனவில் ஊழல் மோசடி செய்துள்ளார் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளாரே?
பதில் : ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர் முதலில் பொறுப்புமிக்கவராக இருத்தல் வேண்டும். இந்த குற்றச்சாட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சேறு பூசும் செயலாகவே கருதப்படுகிறது. அவர் ஆயுதக் கொள்வனவின் போது ஊழல் செய்தார் என்பதற்கோ அல்லது அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களுக்கோ சாட்சியம் இல்லை.
இந்த ஆயுதக் கொள்வனவு 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமக்கு இப்போது ஆயுதங்கள் தேவைப்படாது அதற்கு பதிலாக ஆயுதத் தாங்கிகளைப் பெற்றுத் தாருங்கள் என்றே ஜெனரல் சரத் பொன்சேகா குறித்த ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட நிறுவனத்திடம் எழுத்து மூலமாகக் கோரியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குறித்த நிறுவனமே பொறுப்பு கூற வேண்டும். எமக்கு அந்த நிறுவனத்தின் மீதே சந்தேகம் எழுந்தள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று 27ஆம் திகதி பதவியேற்றவுடன் செய்யும் முதல் வேலை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதேயாகும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen