டிசம்பர் மாதம் 17ம் திகதி சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்குதல் நடைபெறும், ஜனவரி மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தகையோடு கொழும்பின் அரசியல் நகர்வுகள், அரசியல் செயற்பாடுகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம்.
ஆளும் தரப்பு கட்சிகளின் கூட்டணி தற்போதைய அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷ அவர்களையும், பிரதன எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் கைகோர்த்துள்ள கூட்டணிக்கட்சிகள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களையும் களமிறக்கத் தீர்மானித்துவிட்ட நிலையில் ஏனைய சிறு கட்சிகள் தமது வேட்பாளர்களையும் களமிறக்க முடிவு செய்து மும்முரமான கலந்தாலோசனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் பிரதான வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது மட்டில் தற்போது தீர்மானம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த அதிபர் தேர்தலிலே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது மட்டில் இதுகாலவரையில் தமது ஆதரவு யாருக்கு என்பது மட்டில் முடிவுக்கு வராத கட்சிகளை தமது பக்கம் இழுப்பதில் இரு பிரதான வேட்பாளர்களை உள்ளடக்கிய கட்சிகளின் கூட்டணி மிகவும் மும்முரமாக தமது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் என பலதும் தமது ஆதரவு யாருக்கு என்பதனை அறிவித்து வருகின்றன.
இந்த அதிபர் தேர்தலில் கிழக்கு மாகாண முதல்வர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பவரது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிபர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் அரசின் உயர்மட்டத்திற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்தைகளின் பின்னரே அவ்வறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதுபோல், புளொட், ஈழமக்கள் ஜனநாயக கட்சிகளின் அறிவிப்பும் அரசின் பக்கம் தாம் இருப்பதாகவே வெளிவந்துள்ளன. இதுகால வரையில் அரசின் பக்கமாக இருந்து வந்த தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் ஆளும் அரசுக்கே தமது ஆதரவு எனவும் மறாhக, எதிர்த்தரப்புக்கு ஆதரவு வழங்கத்தயாரில்லை என்பதனை அக்கட்சிகளின் அறிவிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
இதேவேளையில் திரு.மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தமது ஆதரவை ஜக்கிய தேசிய கட்சி உள்ளடக்கப்பட்ட கூட்டணிக்கட்சிகளின் ஜனதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேவேளையில், தற்போதைய நாடாளுமன்றத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமது ஆதரவினை யாருக்கு வழங்குவார்கள் என்பது மட்டில் எல்லோரது கவனமும் திசை திரும்பியுள்ளது. அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் இரு பிரதான கூட்டணியும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் அவர்களை அதிபர் மகிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசியுள்ளார். இச் செய்தியினை பல ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டபோதிலும் இச்சந்திப்பின் போது தான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தெளிவான பதில்கள் கிடைக்கவில்லையென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதனையும் இங்கு சுட்டிக்காட்டுதல் மிகப்பொருத்தம்.
கடந்த மேமாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் வெளிநாடுகளில் தங்கியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தற்போது கொழும்பு திரும்பியுள்ளார்கள். அதுபோல் தமது மாவட்டங்களுக்கு சென்று வரமுடியாத நிலையில் இருந்த கிழக்குப்பகுதி நடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சீராகச் சென்று வருகின்றார்கள். இவர்களுக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணு நடவடிக்கைகளின் போது வரலாறு காணாதவகையிலான இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. இதன்போது கூட கூட்டமைப்பின் மட்டக்களப்பு நடாளுமன்ற உறுப்பினர் திரும்ப முடியாத நிலையிருந்த செய்தியினையும் நாம் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் தங்கியிருந்து தற்போது கொழும்பு திரும்பியுள்ள தமிழத்தேசிய கூட்டணி நாடாளு மன்ற உறுப்பினர்கள் உட்பட சில அரசின் உயர்மட்டத்துடன் மேற்கொண்டுள்ள ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போது செயற்படுவதாக பரவலாக பேசப்படுகின்றது. இதனை நிராகரிக்கவும் முடியாதுள்ளது. சிறிலங்கா அரசை விமர்சிப்பதனை முழுவேலையாக கொண்டிருந்த சில தமிழத்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மிகவும் மௌனித்துவிட்டதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருப்பது தெட்டதெளிவாக தெரிவின்றது.
இதுமட்டுமல்லாது, சிறைகளிலும் நாடு திரும்ப முடியாத நிலையிலும் தமிழத்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதனை நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலை மிகவும் நெருக்கடிக்குள் நிற்கின்றது. இவ்அதிபர் தேர்தலில் பகிரங்கமானதும், உறுதியானதுமான மேற்கொள்ள முடியாது அவர்கள் தடுமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்.
தமது கட்சி இவ் அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அவ்வாறு இல்லாது போனால், தான் தனித்து நின்று சுயேச்சையாக போட்டியிடவுள்ளதாகவும் சென்னையில்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதனை அவரது சக நடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளார்கள். இந்த நிலையை வைத்துப்பார்க்கும் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழம்பியுள்ளார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கெர்ணடு மகிந்த தலைமையிலான அரசு தமிழர்கள் மீது ஏவிவிட்ட இனப்படுகொலைக்கு உத்தவிட்ட மகிந்த ராஜபக்ஷவும், அக்கட்டளையினை சிரமேற்கொண்டு நிலைவேற்றிய தளபதியும் இன்று இருவேறு கட்சிகளின் கூட்டணியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டுக்கொண்டு தாம் அழித்த இனமக்களின் அதரவினை தம் வெற்றிக்காக கேட்டு நின்கின்றார்கள்.
அதற்கு ஆதரவாக தமிழின அழிப்பிற்கு சிறிலங்கா அரசுக்கு முண்டுகொடுக்கும் தமி; அருவடிகள் சிலரும் இருப்பதால் தமிழ் மக்கள் வாக்குகள் மகிந்த ராஜபக்ஷவின் பக்கம் தமிழ் மக்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாமல்விட்டாலும் செல்லலாம். கடந்த காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் சமாதானம் என்ற பல்லவி பாடப்பட்டது. இம்முறை தேர்தல் பிரச்சாரம் சற்று வித்தியாசமானதாக அமையப்போகின்றது. அதாவது விடுதலைப் புலிகளை அழித்துவிட்டமைக்கு அந்த வெற்றிக்கு யார் உரிமைகோருவது என்பதே பிரதான பிரச்சார விடயமாக அமையப்போகின்றது. அரச இயந்திரத்தின் அனைத்து வளங்களும் தற்போதைய அதிபருக்கு சாதகமாகவுள்ளது. இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இப்போதே அவரது படங்களை தாராளமாக கணமுடிகின்றது
இன்றைய நிலையில் தமிழர் தாயகத்தில் வாழும் பெருவாரியான மக்களுக்கு கொழும்பின் அரசியல் நாற்காலியில் மகிந்த இருந்தர்லும் ஒன்றுதான் பொன்சேகா இருந்தாலும் ஒன்றுதான். வரலாறு காணாத இனவழிப்பு ஒன்றை அரங்கேற்றியதில் இந்த இருவரும் சளைத்தவர்கள் அல்ல. இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இவர்களில் எவராவது ஒருவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால் அது தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவிற்கு எடுபடும் என்பது தெரியவில்லை.
இந்தியா உள்ளிட்ட சில சக்திகளின் அழுத்தங்களும் இந்த விடயத்தில் இல்லாமல்போகாது. இந்த இடத்தில் இன்னுமொன்றையும் நாம் கூறியாகவேண்டும். அதாவது, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்று சில வல்லரசுகள் பேரளவில் பேசிக்கொண்டு காலத்தை கடத்தினாலும் விடுதலைப்புலிகளை அழித்தமை மட்டில் சர்வதேசத்திற்கு மகிழ்ச்சியே. அதற்காக அவர்கள் மகிந்தவுடன் கைகுலுக்கினாலும், அவரது சீன அரசுடனான உறவுகள் மட்டுமே அவர்களுக்கு சில ஆதங்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பெயரிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு கடந்த காலங்களில் இருந்ததுண்டு. அதன் அடிப்படையில் அக்கட்சியின் கருத்தின் பக்கம் தமிழ் மக்கள் இருந்துவந்ததுண்டு. இப்போதுள்ள நிலையில் அக்கட்சியின் முடிவுகள் மட்டில் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதுவும் இங்கு முக்கியமானது.
இவ்அதிபர் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்கப்போகின்றது என தமிழ் மக்கள் மட்டுமல்ல, இலங்கை அரசியலை உற்று நோக்குபவர்கள் கூட ஆவலோடு எதிர்பார்த்துள்ளார்கள். அதுவிடயம் மட்டில் அவர்களது தீர்க்கமான முடிவுகளே அவர்களின் எதிர்கால அரசியல் இருப்பை உறுதிசெய்யும் என்பது பொதுவான கருத்தாகும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen