சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டது என்று அரசு அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் தோன்றி உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.
மக்கள் விடுதலை படை [ People's Liberation Army - PLA ] என்ற பெயரில் கிழக்கில் உருவாகியுள்ள புதிய இயக்கம் ஒன்று சிறிலங்காவில் ஆயுதப் பேராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தி டைம்ஸ் [The Times ] என்ற பிரித்தானிய ஏடு தனது செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
"தமிழர்களின் தனித் தாயமான தமிழீழத்தை அடையும் வரையும் சிறிலங்கா அரச மற்றும் படையினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நான்கு மாதங்களுக்கு முன்னதாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது" எனவும், “இந்தப் போராட்டம் இப்போதைக்கு ஓயாது” எனவும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோணேஸ் தம்மிடம் சொன்னதாக தி டைம்ஸ் இணையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்பான மறைவிடம் ஒன்றில் கடந்த வாரம் தி டைம்ஸ் ஊடகவியலாளர் கோணேசைச் சந்தித்துப் பேசினாராம்.
“கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் 'மக்கள் விடுதலைப் படை'யை ஒருங்கிணைத்துக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். ஜனநாயக, பொதுவுடமை விடுதலையை வடக்குக் கிழக்குக்கு (தமிழ் ஈழம்) பெற்றுத் தருவதே எமது இலக்கு” என கோணேஸ் விபரித்தாராம்.
தமது இயக்கத்தில் இப்போது 300 பேர் வரையிலான தீவிர செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்ன கோணேஸ், வன்னித் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 280,000 பேரில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் தம்மோடு இணைத்துக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டாராம்.
இந்த இயக்கம் விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என வலியுறுத்திய கோணேஸ், "மக்கள் விடுதலைப் படை"யின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் தமது இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம் என விளக்கினாராம்.
இப்போது தனது 40 வயதுகளில் இருக்கும் கோணேஸ் - தான் 1980-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தாராம். அவரது பயிற்சியாளர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனராம்.
“பாலஸ்தீன விடுதலைப் படை, கியூபா மற்றும் இந்திய மார்க்சிஸ்டுகள் ஆகியோருடன் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களும் எங்களைப் போன்றே தமது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” எனவும் கோணேஸ் தெரிவித்தாராம்.
“இங்கே எங்களது எதிரி சிறிலங்கா அரசு மட்டும் தான். நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே சண்டையிடுகிறோம். நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு” என்று தமது நோக்கத்தை கோணேஸ் விளக்கினாராம்.
ஆனால் அவரது அணியினர் மூவரை மீளச்சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் 15, 16 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர் என ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக - திடீரெனத் தோன்றியிருக்கும் இந்த "மக்கள் விடுதலைப் படை" பற்றிச் செய்திகள் வெளியாகின்ற போதும் அதன் பின்னணி தொடர்பாக அரசியல் மற்றும் இராணுவ நோக்கர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இது சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினரின் ஒரு புதிய வேலைத் திட்டம் போலத் தோன்றுவதாகச் சில அவதானிகள் கருதுகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் அகியோரை வைத்து சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் முன்னர் "சித்து விளையாட்டு" ஒன்றை ஆட முற்பட்டனர்.
ஆனால் - அது அம்பலமாகி அவர்களது திட்டங்கள் தோல்வியுற்ற நிலையிலேயே இந்தப் புதிய வேலைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகின்றது.
தம்மிடம் சரணடைந்துள்ள மற்றும் கைதாகியுள்ள விடுதலைப் புலிப் போராளிகளையும், ஏற்கெனவே தம்மோடு இணைந்து செற்படும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் இந்தப் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பயன்படுத்தக்கூடும்.
அல்லது 11,000 போராளிகளினதும் விடுதலையை பின்போடுவதற்கான ஒரு காரணமாகவும் காண்பிக்ககூடும்.
இது தமிழ் மக்களை ஏமாற்றி - அவர்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதற்கான எற்பாடுகளில் ஒன்று எனவும், அதே வேளையில் - "தமிழ் பயங்கரவாதம்" இன்னும் அழிந்துவிடவில்லை என்ற விதமாகக் கதைகளைப் பரப்பி - எதிர்வரும் தேர்தல் சமயத்தில் சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடும் ஒரு முயற்சி எனவும் அவதானி ஒருவர் கருத்துக் கூறினார்.
அதே வேளையில் - தொடர்ந்தும் அதே பழைய "பயங்கரவாதப் பூச்சாண்டி"யைக் காட்டி, உலகையும் ஏமாற்றி - தம் மீது வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தமக்குச் சாதகமாக வளைத்து எடுக்கும் ஒரு முயற்சியாகவும் சிறிலங்கா அரசு இதனைச் செய்வதாக இன்னொரு அவதானி கருத்துக் கூறினார்.
அதே வேளை - இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது.
வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது - தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு - அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு - ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக - இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் பாவித்து - இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடலாம் என்று கருதவும் இடமுண்டு.
கோணேஸ் என்பவர் சொல்லியிருக்கும் கதைகளையும், பேசியுள்ள விதங்களையும் பார்க்கும் போது - வெளிச் சக்தி ஒன்றின் ஈடுபாடு இதில் இருப்பது போலவே தெளிவாகத் தோன்றுவதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.
RSS Feed
Twitter



Montag, Dezember 07, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen