ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின்.
இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துத் தரப்பிலிருந்து சிலர் கருத்து தெரிவித்தபோது இலங்கை யில் இருநதபடி பதிலடியாக பேசி வந்தார் ஆசின்.
தமிழர்கள் மீது தனக்குள்ள அக்கறை கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு இல்லையே என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ராதாரவியும், சத்யராஜும் ஆசினை கடுமையாக கண்டித்துப் பேசியிருந்தனர்.
இதற்கும் தற்போது ஆசின் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அதில் தடை விதித்தால் விதிக்கட்டும், நான் நடிக்க மாட்டேன் என்று படு கேஷுவலாக கூறியுள்ளார் ஆசின். அதேசமயம், மன்னிப்பெல்லாம் கேடக் முடியாது என்பதையும் சூசகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான ஆசினின் பேச்சு...
இலங்கையில் நடந்த படவிழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடிகர் சங்கம் கூறியதை நான் கடைபிடித்தேன். அந்தத் தகவலை எனக்கு நடிகர் சங்கத்தில் இருந்து கடிதம் மூலம் தெரிவிக்கவில்லை. பத்திரிகை, நெட் வாயிலாகத்தான் பார்த்தேன்.
இந்நிலையில் அங்கு நடந்த இந்தி படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்தார்கள். அப்போது பட நாயகன் சல்மான்கான் மற்றும் படத்தின் தயாரிப்பாளரிடம் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலக கூட்டமைப்பு தடை விதித்ததை எடுத்துக் கூறினேன்.
அதற்கு அவர்கள் அந்த தடை பட விழாவுக்கு மட்டும்தான். படப்பிடிப்புக்கு செல்லக் கூடாது என்று சொல்லவில்லையே என்று தெரிவித்தனர். அதன்பிறகுதான் இலங்கை சென்றேன். அங்கு சென்றபிறகு, கஷ்டப்படும் தமிழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும் முடிவு செய்தேன்.
தமிழர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், இலங்கை அரசின் அனுமதிபெற வேண்டும். இல்லாவிட்டால் செல்ல முடியாது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கூட, அந்நாட்டு அரசிடம் அனுமதி பெற வேண்டும். சமீபத்தில் அனுமதி இல்லாமல் வந்த ஐ.நா. சபை உறுப்பினர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அப்படியிருக்கும்போது, அந்த அரசின் அனுமதி இல்லாமல் நான் எப்படி பாதிக்கப்பட்ட தமிழர்கள் பகுதிக்கு செல்ல முடியும்.
நானும் வர்றேன் என்றார் ஷிராந்தி
அந்த அடிப்படையில் நான் அரசிடம் அனுமதி கேட்டபோது, நானும் உங்களுடன் வருகிறேன் என்று ராஜபக்சே மனைவி கூறினார். அவரிடம் நீங்கள் வரக்கூடாது என்று நான் எப்படி கூறமுடியம். நீங்கள் வரக்கூடாது என்று என்னால் தடுக்கவும் முடியாது. அவரும் உடன் வந்தால் தமிழர்கள் படும் கஷ்டத்தை உணர முடியும் என்று நினைத்தேன்.
என்னை தமிழர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான் 10 ஆயிரம் தமிழர்களுக்கு கண் சிகிச்சை போன்ற மருத்துவ உதவியை என்னால் செய்ய முடிந்தது.
கட்டிப்பிடித்து அழுதனர்
அங்கிருந்து புறப்பட நினைத்தபோது ஒரு சிலர் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு, நீங்கள் இங்கேயே இருங்கள், போகாதீர்கள் என்று அழுதனர். அதேபோல் இன்னும் சிலர், எங்களுக்கு கண் ஆபரேஷன் முடிந்த பிறகு அசினை பார்க்க வேண்டும் என்றார்கள்.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடும் சமயத்தில் என்னை அழைத்து நேரில் விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் வந்திருப்பேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே முறைப்படி எந்தத் தகவலும் தரவில்லை.
ராதாரவி, சத்யராஜ் போன்றவர்கள் தங்கள் கருத்தை கூறி இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தைதான் பிரதிபலித்திருக்கிறார்கள். அதைத்தான் நானும் செய்தேன்.
மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்?
எனக்கு தடை விதிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தடை விதிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் நான் என்ன தவறு செய்தேன். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது தவறா?
இந்திய சட்டத்தின் சொல்படி...
இந்திய சட்டம் என்ன சொல்கிறதோ, நடிகர் சங்கம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன். அதை மீற மாட்டேன். இதுவரை மீறியதும் இல்லை.
இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன். ஆனால் அப்படி எந்த கடிதமும் வரவில்லை. நடிப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். அதில் அரசியலை நுழைக்க கூடாது என்று கட் அன்ட் ரைட்டாக பேசியுள்ளார் ஆசின்.
0 Kommentare:
Kommentar veröffentlichen