Dienstag, 27. Juli 2010

நானும் ஈழத் தமிழன்தான்-நாம் தமிழருக்கு கருணாஸ் பதில்

நானும் ஈழத் தமிழன்தான். ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல் வாதியோ இல்லை நான் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:



ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான். நான் ஒரு சாதாரண நடிகன்.



என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம்.



25.07.2010 அன்று வெளியான செய்திதாள் ஒன்றில், எனக்கு விடுக்கப்பட்ட நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியின் கண்டனத்தை படித்தேன். என்னை கைபேசியில் அழைத்தும், கொச்சையான குறுந்தகவல்கள் அனுப்பியும் என் மனதைக் காயப்படுத்திய நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் கண்டன அறிக்கையே அது.



இக்கண்டன அறிக்கையில் சொன்ன கருத்துக்களை என்னிடம் நேரிடையாகவோ அல்லது தொலைபேசியில் முறையாகவோ சொல்லியிருந்தார்கள் எனில் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என் பயணத்தை ரத்து செய்திருப்பேன். ஆனால் என்னை அவர்கள் காயப்படுத்த மட்டுமே செய்தார்கள்.



அந்த பத்திரிக்கையை படித்தபின் ஈழத்து நண்பர்களிடம் விசாரித்த போது அதில் உண்மை இல்லை என்றார்கள்.



நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஒரு தமிழனாக என் கோரிக்கை என்னவெனில், உங்களுடைய அரசியலுக்கு என்னை பலியாக்காதீர்கள். நான் எந்த காலத்திலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகிறேன் இனியும் இருப்பேன் எனவே என் வேலையை செய்ய விடுங்கள்.



என் போன்ற சாதரண மெய்யான உணர்வின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் ஈழ ஆதரவாளர்களை ஈழமக்களிடமிருந்து பிரிப்பது எங்களுக்குள் முரனை உருவாக்குவது போன்ற செயல்களின் மூலம் இருக்கிற ஆதரவாளர்களையும் ஊனபடுத்தி குறைத்துவிடாதீர்கள். நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியில் இல்லாதவர்களும் தமிழர்களே, தமிழ் உணர்வாளர்களே என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.



என் ஈழ சகோதரனுக்காய் நான் செய்தவற்றை நானே வெளியே சொல்ல வேண்டிய அவல நிலைக்கு என்னை தள்ளிவிட்டிருக்கிறீர்கள். கமிஷ்னர் அலுவலகத்தில் பத்திரிக்கை நண்பர்களிடம் நான் செய்தவற்றை சொன்னபோது என் மனம் எப்படி வலித்தது என்பது நான் மட்டும் உணர்ந்த உண்மை.



ஒருவேளை உங்களுக்கு நான் சொன்னதில் சந்தேகம் இருப்பின் புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் ஈழ நேரு அவர்களிடம் என் தொப்புள்கொடி உறவின் மீதான உங்கள் சந்தேகத்தை மெய்பித்துக்கொள்ளுங்கள்



கருணாநிதியாக இருந்த என்னை கருணாஸாக வாழவைத்த என் தாய் தமிழ் இனத்திற்கு வாழும் வரைக்கும் கடமைபட்டவன் நான் என்று கூறியுள்ளார் கருணாஸ்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen