Samstag, 17. Juli 2010

இந்திய-இலங்கை டெஸ்ட் தொடர் - ஓர் அலசல்

ஒரு வழியாக கால்பந்தாட்ட ஜுரம் தணிந்து விட்ட நிலையில், இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் காய்ச்சல் தொடங்கிவிட்டது.


இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இலங்கை டெஸ்ட் தொடருக்கு செல்லும் முன்பு, முந்தைய இரண்டு தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகளையும் முடிவுகளையும் சற்றுப் பார்த்துவிடுவோம்..

சோபிக்காத இளம் அணி...

இருபதுக்கு இருபது உலகக் கோப்பையில் மண்ணைக் கவ்விய இந்திய அணி, அதன் தொடர்ச்சியாக ஜிம்பாப்வே நாட்டில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதிக போட்டிகளில் விளையாடி களைத்து விட்ட காரணத்தால் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடாமல் போனது இத்தொடருக்கு சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது. கிரிக்கெட் ரசிகர்களுக்கும் போர் அடித்து விட்டது.

மேலும், அங்கு ஆடுகளத்தின் காரணமாக அனைத்துப் போட்டிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடும் அணிக்கே வெற்றியை தேடுத் தந்ததால் இத்தொடர் இந்திய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் பெரும் தீணியாக அமையவில்லை. தொடரிலும் விறுவிறுப்பும் இல்லை.

இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா (கூடுதலாக கேப்டன் பொறுப்பு), கார்த்திக், கோஹ்லி, யூசப் பதான், ரோகித் சர்மா என பலரும் தங்களது பங்களிப்பை போதுமான அளவுக்கு கொடுத்தும் இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியவில்லை.

பின்னர் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிகளை கண் குளிற ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேலும் 10 நாட்கள் ஊரை சுற்றிவிட்டு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றனர்.

அதிலும் இருபது ஓவர் தொடரில் அதிக அனுபவமில்லத ஜிம்பாப்வே அணியை ஒரு பச்ச புள்ளையை ஓட விட்டு ஜெயித்த இந்திய அணி கம்பீரமாக நாடு திரும்பியது.

ஆனால், உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், இத்தொடரில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணி தங்கள் அணியை நன்றாகவே முன்னேற்றம் செய்து கொண்டன.

குறிப்பாக இலங்கை அணி சற்று பலம் ஏற்றிக் கொண்டது என்பது தான் உண்மை. அந்த அணிக்கு ரன்தீவ், கண்டம்பி, வலிகேத்ரா போன்ற வீரர்கள் தங்களது இடத்தை அணியில் கெட்டியாக பிடித்து கொண்டனர்.

பொதுவாக, இந்திய அணி வீரர்களைவிட இலங்கை அணி வீரர்கள் இறுதி வரை போராடுவதில் கெட்டிக்காரர்கள், திறமையானவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காக ஐ.சி.சி. மூன்று முறை விருது கொடுத்து கவுரவித்தது என்பதை எல்லோரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அணியை எளிதாக பந்தாடி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டிய நம் அணி, அவர்களிடம் தட்டுத்தடுமாறிதான் விளையாட முடிந்தது.

வீராப்பு...

அத்தொடருக்கு பிறகு இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றது. இதில் சச்சின், யுவராஜை தவிர மற்ற முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனால் இத்தொடர் நமக்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் சில சர்ச்சைகளும் எட்டுக்கட்டி பறந்தது. குறிப்பாக ரவிந்திர ஜடேஜா அணிக்கு தேவையா என்ற கேள்வி அதிகம் எழுந்தது.

அதிரடி மன்னன் ஷேவாக்கும் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதில் இடம் பிடித்த தமிழக வீரர் முரளி விஜய் சொதப்பினார். இதனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் விமர்சனத்துக்கு ஆளானார்கள்.

தொடரில் வங்காளதேசமும், பரம எதிரியான பாகிஸ்தானையும் எளிதாக வீழ்த்திய இந்திய அணி, லீக் சுற்றில் இலங்கை அணியுடனான போட்டியில் மட்டும் மரண அடியோடுயோடு தோல்வியை தழுவியது. காரணம் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் அலட்சிய போக்கு மற்றும் அத்தொடரில் நன்கு பயிற்சி எடுத்த இலங்கை அணி வீரர்களும் தான் நம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

இறுதிப் போட்டியில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது என வீராப்பாக நாம் சொல்லிக் கொண்டாலும், மேலும் ஒரு இறுதிப் போட்டி வைத்திருந்தால் இந்திய அணியின் உண்மை நிலை தெரிந்திருக்கும்.

இந்த ஃப்ளாஷ்பேக்குக்கும் இப்போது நடக்கவுள்ள தொடருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா?

இத்தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற கேள்வியின் பின்னணிக்கு ஃப்ளாஷ்பேக் அவசியமாகிறது.

முரளிக்கு ஆறுதல் பதவி...

இலங்கை அணியில் இடம்பிடித்து பல சாதனைகளை புரிந்து நாட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் புகழை சேர்த்த இலங்கை சூழற்பந்து வீச்சாளார் முத்தையா முரளிதரனுக்கு துணைக் கேப்டன் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. காரணம், அவர் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுவேன் என அவர் அறிவித்துள்ளதால்..!

இதற்கு முன் தன் திறமையால் உலகப் புகழ் பெற்ற போது கூட அவருக்கு கேப்டன் பதவியை தர மறுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர் இப்போது ஓய்வு அறிவித்துள்ளதால் இந்த ஆறுதல் பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.

இலங்கையில் தமிழனுக்க்கு அரசியலில்தான் அங்கிகாரம்தான் கிடைக்கவில்லை; கிரிக்கெட்டிலுமா என்று நீங்க நினைத்து இந்த பக்கத்தை அரசியல் பக்கமாக ஆக்க வேண்டாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், மற்ற வீரர்களின் திறமையை நாம் அலசி ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

கேப்டன் சங்ககாரா: சொல்லவே வேண்டாம் அதிரடியிலும் சரி, டெஸ்ட் போட்டியிலும் சரி, டிவெண்டி 20 என எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கும் திறமை கொண்டவர். தற்போது கேப்டன் பதவியிலும் ஜொலிக்கிறார். இவரது ஆட்டத்திரன் பற்றி குறை கூறவே முடியாது.

துணைக் கேப்டன் முத்தையா முரளிதரன்: இவரை பற்றியும், சச்சினை பற்றியும் இப்போதைக்கு பேசுவது சரியல்ல. காரணம், இவர்கள் சாதனைக்கு இவர்களே நிகர் என்பது சொல்லித் தெரிவதில்லை. முதல் டெஸ்டிலேயே முரளி 8 விக்கெட் வீழ்த்தி சாதனைப்படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தில்ஷான்: ஐபிஎல் பெற்றெடுத்த மற்றொரு அதிரடி மன்னன். எந்த போட்டியாக இருந்தாலும் அதிரடியில் கலக்குகிறார். டெஸ்ட் போட்டியில் ஷேவாக் பாணியே தனது பாணியென சொல்லி சொல்லி அடித்து விருகிறார். இவரது பாணி துவக்க பந்து வீச்சாளர்களுக்கு புது தலைவலியாக உறுவெடுத்துள்ளது.

ஜெயவர்த்னே: இலங்கை கிரிக்கெட் அணியின் ரோல் மாடல் இவரே. எத்தகைய சூழலிலும் நிலைத்து நின்று ஆடுவதில் கெட்டிக்காரர். டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் என்பது இவருக்கு நெல்லிக்காய் சாப்பிடுவது போன்று மிக எளிதான காரியம். பல போட்டிகளில் இவர் அவுட்டாகும் முறையை கவனித்தால் இவர் செய்யும் சிறு சிறு தவறுகளே இவருக்கு வில்லன் என்பது நன்கு புரியும்.

சமரவீரா: இலங்கை அணியின் நடுநிலை ஆட்டக்காரர்களின் முதுகெலும்பு இவரே. இவரை வீழ்த்திவிட்டால் எளிதாக அடுத்த இரண்டு விக்கெட்கள் வீழ்த்துவது சுலபம் என்றே சொல்லலாம். திறமையான ஆட்டக்காரர்.

பிரனவித்தனா: இந்தியாவுக்கு எதிரான முந்தைய போட்டிகளில் இவரது ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. இவரது வளர்ச்சி இந்த தொடரில் ஜொலிக்கும் பட்சத்தில் இவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியே.

கண்டம்பி: மற்ற அணிக்கு எதிராக ஆடுகிறாராரோ இல்லையோ... மற்ற வீரர்கள் போல் இவரும் இந்தியாவுக்கு எதிரே விளையாடியே நல்ல பெயரை பெற்றவர். அதிரடியிலும் கலக்குகிறார். பார்ட் டைம் பந்து வீச்சும் வீசுவதால் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேத்யூஸ்: இலங்கை அணியின் புதிய நம்பிக்கையான ஆல்ரவுண்டர். அரைசதத்துக்கும், சதத்துக்கும் இவரது ஷாட் எல்லை கோட்டுக்கு அப்பால்தான். அத்தகைய வல்லமை பெற்றவர். எக்கட்டான நிலையில் விக்கெட்களை வீழ்த்துவதில் கெட்டிக்காரர்.

பிரசன்ன ஜெயவர்த்தனே: இலங்கையின் மற்றொரு விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன். இவரது சாதனைகள் இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும், அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள மற்றொரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மறந்துவிடக் கூடாது.

ரங்கனா ஹீரத்: 32 வயது சூழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இவரது சாதனைகள் ஒன்று இரண்டுதான். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முன்னணி நாட்டுக்கு எதிராக இவரது சாதனை மெட்சும்படி உள்ளது. முத்தையா முரளிதரன் பிறகு இலங்கையின் நிரந்தர சூழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இவரும் ஒருவர்.

ரன்தீவ்: புதிய வரவு. இவர் மீது இலங்கை அணி நம்பிக்கையும் உண்டு. இவருக்கு தன்னம்பிக்கையும் அதிக உண்டு. முக்கிய தருணத்தில் விக்கெட்களை சாய்த்து அணிக்கு புதிய திருப்பத்தை கொண்டுவருவதில் கெட்டிக்காரர்.

லஸித் மலிங்கா: பந்தை இவரது கையில் கொடுத்துவிட்டால் அது எந்த வளைவில், எந்த திசையில் வரும் என்பதை கணிப்பது அவ்வளவு சிரமம். கடை நிலை வீரர்கள் இவரது பந்து வீச்சுக்கு பலியாவது சர்வசாதாரணம். அப்படிப்பட்ட பல விக்கெட்கள் இவரது பையில் ஏராளம்.

பெர்னாண்டோ: சரியான நிலையில் பந்து வீசுவதில் கெட்டிக்காரர் என்றால் அது பெர்னாண்டோ என்று சொல்லலாம். ஆனால் கடந்த ஓராண்டு இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. சில மாதங்கள் முன்புதான் அணியில் இடம்பிடித்து வருகிறார். சமிந்தா வாஸ் பிறகுதான் இவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது என்று குறிப்பிடலாம்.

வலிகேத்ரா: ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் கில்லாடி. இவரது பயணம் சில மாதங்கள் முன்புதான் தொடங்கியுள்ளது என்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. தொடக்க வீரர்களை வீழ்த்துவதில் சிறந்தவர்.

டாமிக்கா பிரசாத்: இவரும் வேகப் புயல்தான். அனேகமாக இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான்.

திருமானே: இலங்கை அணியில் புது துவக்க வீரர்களில் இவரும் ஒருவர். இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஒரு அரை சதமும், இரண்டாது இன்னிங்ஸில் ஒரு சதமும் அடித்து அசத்தியுள்ளதால் இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆக, இலங்கை வீரர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளை பார்க்கையில் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இனி...

'பலம் வாய்ந்த' இந்திய அணி...

கேப்டன் தோனி: இதே இலங்கை அணியை நம் இந்திய மண்ணில் வைத்து தொடரை 7-0 என்ற கணக்கில் வீழ்த்த அதிமுக்கிய காரணமான இவரது முதல் பயணம் இன்று வரை நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளது. இவரது தலைமையில் பல சாதனைகளும், பல வரலாற்று மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதால் இத்தொடரையும் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இவர் குவிக்கும் 40ம் உதல் 50 ரன்கள் அணிக்கு பெரும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்து விடுகிறது.

டெஸ்ட் போட்டியில் மட்டும் பெரும் சாதனை இன்னும் நிகழ்த்தப்படவில்லை. திடீர் திருமணத்துக்கு பிறகு இவருக்கு மேலும் நல்ல முன்னேற்றம் தந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே?

துணைக் கேப்டன் ஷேவாக்: இந்திய அணியில் இருக்கும் ஒரே ஒரு துவக்க + அதிரடி வீரர் இவர் மட்டும்தான். அரை சதமும், சதமும், இவருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. முச்சதம் என்பது இவரது தீராத பசிக்கு தகுந்த உணவு. அணியின் வெற்றியை இறுதி வரை காத்திராமல், விரைவில் பெற்றுத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது சமிபத்திய ஆட்டம் ஒரு எடுத்துக்காட்டு. பார்ட் டைம் பந்து வீச்சிலும் கலக்குவது அணிக்கு மிகப்பெரிய பலம்.

கவுதம் கம்பீர்: அசத்தலான ஸ்டைலிஷ்ஷான இந்திய அணி துவக்க ஆட்டக்காரர். ஒவ்வொரு ஷாட்டிலும் நேர்த்தியை காணலாம். இவரது துவக்கம் இந்திய அணிக்கு சிறந்த ஊட்டம். இவரை நம்பி எத்தகைய இலக்கையும் எட்டிவிடலாம். இவரது விக்கெட் விழுந்துவிட்டால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்பது நிச்சயம்.

ராகுல் டிராவிட்: நீண்டகாலமாக விளையாடினாலும் ஒவ்வொரு போட்டியிலும் தனது முத்திரையை திடமாக பதிக்க கூடிய சிறந்த ஆட்டக்காரர். இந்திய அணியின் 'தி வால்' என புகழ்பெற்ற இவருக்கு நாம் புகழ் மாலை எவ்வளவுதான் சூட்டுவது? எத்தகைய பந்து வீச்சாளர்களும் இவரது விக்கெட் வீழ்த்துவது தண்ணிக்குடித்த பாடுதான். இவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் இந்தியாவின் முதுகெலும்பு உடைந்துவிட்டது என அர்த்தம் கொள்ளலாம்.

சச்சின் டெண்டுல்கர்: சாரி நோ கமண்ட்ஸ்! அட போங்க இப்பதான் 16 வயதே முடிந்து புதுசா களத்துல இறங்குறாரு.. இவரைப் பத்தி என்னத்த சொல்றது? இவர் நல்லா ஆடுவார்னு மும்பைல சொல்லிக்குறாங்க.. இப்போதைக்கு அவ்வளவுதான்.

விவிஎஸ் லஷ்மன்: களத்தில் டிராவிட்டுக்கு சரியான துணை மற்றும் போட்டி என்றால் இப்போதைக்கு அது இவர் மட்டும் தான். எத்தகைய பந்தையும் பவுண்டரிக்கும் மாற்றும் திறன் படைத்தவர். ஆனால் லூஸ் பாலில் தனது விக்கெட்டை எளிதாக இழப்பது இவரது வீக்னஸ்.

சுரேஸ் ரெய்னா: ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர். அணிக்காக இறுதி வரை போராடும் முரட்டு சிங்கம் இவர் என அடித்து சொல்லலாம். தோனியின் நம்பிக்கையும் இவரே. ஆனால் டெஸ்ட் போட்டியில் இவர் களமிறங்குவது இதுவே முதல் முறை. ஆகையால் டெஸ்ட்டில் இவர் எப்படி செயல்படுவார் என்பதை பொருத்திருந்தே பார்ப்போம்.

யுவராஜ் சிங்: நீண்ட நாட்களாக டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். பயிற்சி ஆட்டத்திலும் சதம் அடித்து அணியின் ஸ்கோரை தனி ஒருவராக தூக்கி நிறுத்தியுள்ளதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முரளி விஜய்: புது வரவானாலும் தேர்வாளர்களின் கணிவான பார்வையை பெற்றவர். தமிழகத்தில் பிறந்ததால் இவர் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டாலும், சொல்லிக்கொள்ளும் வகையில் சிறப்பாக ஆடினால் இந்தியா முழுவதும் நல்ல பெயரை எடுக்கலாம். கிடைத்த வாய்ப்பை நன்கு பயண்படுத்துவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாகா: இவரை ஏன் கூப்பிட்டாங்க? எதற்கு கூப்பிட்டாங்க என இவரை வைத்து ஒரு பட்டி மன்றமே நடக்கிறது. முன்பு கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டார். இந்த முறை எப்படி என பார்ப்போம். ஆனால் தோனி காயம் அடைந்தால் இவர் விக்கெட் கீப்பர் அது மட்டும் உறுதி.

ஹர்பஜன் சிங்: இந்திய அணியின் ஒரே நம்பிக்கையான சூழற் பந்து வீச்சாளர் இவர்தான். கும்பிளேக்கு பிறகு இந்திய அணியை பல போட்டிகளில் காப்பாற்றி வருகிறார். தன் சாதனையை ஹர்பஜன் தான் முறியடிப்பார் என முத்தையா முரளிதரன் கூறியிருப்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் முரளியின் ஸ்டேட்மண்ட் இலங்கை அணிக்கு கிலியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமித் மிஸ்ரா: இந்தியாவின் மற்றோரு அருமையான சூழற் பந்து வீச்சாளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வரிசையாக எதிரணிகளை திணறடித்தவர் இந்த முறை இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறார். பயிற்சி ஆட்டத்தில் இவரது பந்து வீச்சு எடுபடவில்லை என்றாலும் இவர் மீதான நம்பிக்கை குறையவில்லை.

ஓஜா: மற்றொரு ஆக்ரோஷ சூழற்பந்து வீச்சாளர். ஷாட் பிட்ச் டெலிவரியில் சிறந்தவர். பயிற்சி ஆட்டத்திலும் கலக்கியுள்ளதால் களமிறங்கும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இதுவரை சரி... ஆனால் இனி..?

ஜாகீர் கான், ஸ்ரீசாந்த் இல்லாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?

முனாப் பட்டேல்: கடந்த சில வருடங்களாக அணியில் சேர்க்கப்படாத இவர் ஸ்ரீசாந்த் இல்லாத காரணத்தால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டிவெண்டி 20 தொடரில் சொதப்பிய இவர், முதல் தரப் போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. இவரது பந்து வீசும் ஸ்டைல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் போன்று இருந்தாலும், அவரை போல் இவரும் விக்கெட்டை வீழ்த்தினால் அது இவரது தனிப்பட்ட அதிர்ஷ்டம்தான்.

அபிமன்யு மிதூன்: ஜாகிர்கானுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டவர். 20 வயது பாலகனின் அதிரடி பந்து வீச்சு பயிற்சி ஆட்டத்தில் சுத்தமாக எடுபடவில்லை. ஏனினும் சர்வதேச போட்டிகளில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இஷாந்த் சர்மா: சென்ற வருடம் சூப்பராக அமைந்த இவருக்கும் இந்த வருடம் அடிமேல் அடி. சரியான பயிற்சி வராதது இவருக்கு எதிரான முதல் குற்றாச்சாட்டு. பிறகு ஒழுங்கீனம் என பல குற்றச்சாட்டுகள் வரிசை கட்ட.. அணியிலிர்ந்து கலட்டிவிடப்பட்டார். இவர் எப்படி இந்த தொடரில் சாதிக்க போகிறார் என்பது தெரியவில்லை. பயிற்சி ஆட்டத்தில் இவரது முந்தைய வேகப்பந்து வீச்சுக்கும், இப்போதைய மித வேகப்பந்து வீச்சுக்கும் அதிக வித்தியாசம் தெரிகிறது. கடுமையாக உழைத்தால் மட்டுமே இவர் சாதிக்க முடியும். மற்றபடி இப்போதைக்கு இவரை பற்றி பாட ஒன்றும் இல்லை.

ஆக, இந்திய அணியின் பலவீனம் வேகப்பந்து வீச்சில் தான். இந்திய அணியின் பலம் சூழற்பந்து வீச்சில்தான். இலங்கை அணியின் துவக்க வீரர்களை நம் வேகங்கள் வீழ்த்த முடியவில்லை என்றால் இலங்கை அணி மிகப் பெரும் ஸ்கோரை எட்டும் என்பது மட்டும் நிச்சயம். மேலும் இலங்கை வீரர்கள் சூழற்பந்து விச்சை எளிதில் சமாளிக்கும் திறனும் படைத்தவர்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

மேலே குறிப்பிட்ட வீரர்களின் சில குறைகளை இங்கே தவிர்த்து இருக்கிறேன். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரையில் அதில் உள்ள மிகப்பெரிய ஓட்டையை நாம் அறிந்து கொள்ளதான் வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. காரணம் இத்தகைய பலவீனம் ஒரு அணியின் தோல்விக்கு அதி முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணியின் பந்து வீச்சு இப்போது பலவீனப்பட்டு நொண்டி அடிக்கிறது. இது நிலைக்கும் பட்சத்தில் முதலிடம் என்பது நம் இந்திய அணிக்கு மீண்டும் எட்டாக் கணியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அதிமுக்கியம் என்ற நிலையில் வேகப்பந்து வீச்சின் பலவீனம் நமது முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையே...

இந்திய அணியை விட இலங்கை அணி சற்று கூடுதலான நெருக்கடியில் உள்ளது எனக் கருதினாலும், அந்த அணி நம் அணியை விட சற்று வலிமையாகத்தான் இருக்கிறது. இளமையும், அனுபவமும் சம விகிதத்தில் கலந்திருக்கும் இந்த அணியை நம் அணி வீரர்கள் இந்த முறை வீழ்த்திவிட்டால் அது நமது லக்குதான்! எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது பார்க்கத்தானே போகிறோம்!

17 ஆண்டு ஏமாற்றம் முடிவுக்கு வருமா?

இலங்கையை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக, அஸாருதீன் தலைமையிலான அணி, 1993-ல் கோப்பையை வென்றது.

கடந்த 2008-ல் நடந்த டெஸ்ட் தொடரில், தோனி தலைமையிலான அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இப்போது, மீண்டும் தனது படையுடன் இலங்கைச் சென்றுள்ள தோனி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 17 ஆண்டுகால ஏமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதே தற்போதைய கேள்வி.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen