பாக்கெட் பரிஸ்சிலிருந்து பணம் போட்டு உங்கள் படங்களைப் பார்த்து உங்களை வளர்த்து விட்ட பாமரத் தமிழ் ரசிகன் எழுதிக் கொள்ளும் சிறு கடிதம் இது. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகி இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நீங்களும் வளர்ந்து விட்டது குறித்து எனக்கு எந்த சந்தோசமும் இல்லை அதே நேரம் கவலைகளும் இருந்ததில்லை எல்லா பாமரர்களைப் போல அதில் அசினோ, த்ரிஷாவோ நன்றாக நடித்தால் ரசித்து விட்டுக் கலைந்து செல்கிற சாராசரி நான்.
எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று கழிகிறது என் வாழ்க்கை. இந்த நேரத்தில்தான் வித்தியாசமாக உங்களின் இலங்கைப் பயணம் தொடர்பான பேட்டி சிலவற்றை உங்களின் சில ஊடகங்களில் வாசித்தேன். அதில் ”ஏன் அக்கா எங்களை தமிழகத்தில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை? என்று ஈழ மக்கள் உங்களிடம் கேட்டதாகவும் அதையே நீங்கள் வந்து எங்களிடம் கேட்டுள்ளீர்கள்.
ஒரு பச்சைத் தமிழனாகப் பிறந்த என் கன்னத்தில் ஓங்கி பொளேர்ணு ஒரு அறை விட்ட மாதிரி இருந்தது. ஆறரை கோடி பச்சைத் தமிழர்கள் இருந்தும் ஏண்டா? நீங்கள் எல்லாம் உடம்பு முடியாம இருக்கும் உங்கள் ரத்த சொந்தங்களை ஏன் போய் பார்க்கவில்லை என்பதுதான் உங்கள் கேள்வியின் நோக்கம். அல்லது நீங்கள் சொல்லவருவதும் அதைத்தான். அக்கா எங்களுக்கெல்லாம் வராத பாசமும் கருணையும் உங்களுக்கு வந்ததை நினைச்சு ஒரே பெருமையா இருக்குக்கா? ஆனா உங்களோட இந்த பாசம் எப்பேற்பட்டது? என்ன மாதிரியானது? இந்தக் கருணைக்குப் பின்னால் இருப்பது வெறும் தொழில் நோக்கம் மட்டும்தான? அல்லது அதையும் தாண்டி புனிதமான வேறு ஏதேனும் நோக்கங்கள் உண்டா? இந்தக் கருணையும் இரக்கமும் கேராளாவில் உங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் செல்லக் கூடிய முத்தங்காவின் காடுகளில் இருந்து வெளியேற்றப் பட்ட பழங்குடி மக்கள் மீது ஏன் வரவில்லை? என்பதை எல்லாம் யோசிச்சப்போ எழுதத் துவங்கினது தான்க்கா இந்தக் கடிதம்……….
ஏன் தமிழ்நாட்டில இருந்து யாருமே போகல்ல என்று கேட்டவுடன் தான் நீங்க தமிழ் மக்கள் மீது வெச்சிருக்கிற பாசமும் அன்பும் புரிஞ்சுது……..ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எங்களுக்கெல்லாம் அந்த அன்பு உண்மையிலேயே இல்லையா? என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்கும் போதுதான்க்கா………. அந்த கருப்பு நாட்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
உங்களுக்கு ஏங்கேக்கா அது தெரியப்போவுது. அப்போ நீங்க எந்த ஷூடிட்ங்கிறாக எந்த நாட்டுக்கு போயிருந்தீங்களோ, அல்லது எந்த உச்ச நடிகரின் படத்தை குறிவெச்சு அக்ரீமெண்ட் போடுற பிஸியில் இருந்தீங்களோ யாருக்குத் தெரியும். ஆனா அந்த நாட்கள் அவ்வளவு சுகமானதாக எங்களுக்கு இருக்கவில்லை. அப்போதான் நாங்க போர் நிறுத்தம் கேட்டுப் போராடினோம். தமிழக சினிமாக்காரங்க, அரசியல்வாதிங்க, எல்லோரும் அவங்க அவங்க லெவலுக்கு எவ்வளவு நடிக்க முடியுமோ அவ்வளவு நடிச்சாங்க, அதுல போலிகளும் இருந்தாங்க உண்மையானவங்களும் இருந்தாங்க….ஆனா அதுக்கு முன்னாடியே 2008 – துவக்கத்துலயே வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மேல இலங்கை அரசு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்துடுச்சு. ஒண்ணும் இல்லை ஏ – 9 சாலையைப் பற்றி ராஜபட்சே ஆளுங்க மூலமா கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? அதை மூடிட்டாலே போதும் அதுவே அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடைதான்.
இப்போ நீங்க துணிச்சலா போனதா சொல்றீங்க இல்லியா? அந்தப் பகுதி மீதுதான் தடை கொண்டு வந்தாங்க. அப்பவே ஈழத்தில் பட்டினிச் சாவுகள் ஆரம்பிச்சிடுச்சு தமிழ் நாட்ல பல அமைப்புகளும் தனி நபர்களும் மக்களிடம் சென்று ஈழ மக்களுக்காக உணவு, மருந்து எல்லாம் சேமிச்சு அனுப்பக் காத்திருந்த போது கடைசி வரை இந்தியா அந்த மருந்துகளையோ துணிமணிகளையோ ஈழ மக்களுக்கு அனுப்பச் சம்மதிக்கவில்லை. அப்போதான் இலங்கைக்கு உணவு அனுப்புவோம்ணு கோரி நூறடி ரோட்ல நெடுமாறன் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார். கடைசி வரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த உணவுகளும், மருந்துகளும் புழுத்து அழுகி நாசமாகப் போனதே தவிற பட்டினியால் வாடிய பத்து ஈழத் தமிழனுக்குக் கூட அது கிடைக்கவில்லை.
அதன் பிறகு போர் வந்தது பாதுகாப்பு வலையம்ணு இலங்கை அறிவிச்ச பகுதிகளுக்குள் சென்ற தமிழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோக் கூட இல்லாமல் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிஞ்சாங்க………..ஆமாக்க அவங்க தமிழர்கள் என்பதால் கொல்லப்பட்டாங்க…………நீங்க சினிமாவுல நடிக்கிற மாதிரி டம்மித் துப்பாக்கியை வெச்சு போடுற டிஷ்யூம் சண்டையில்லை இது நிஜமான சண்டை. பாஸ்பரஸ் குண்டுகளும், கிளஸ்டர் குண்டுகளும் வீசப்பட்ட கொடூர யுத்தம். ஈழ வரலாறு அதை நான்காம் ஈழப் போர் என்கிறது.
சினிமாவுல மட்டுமே ஹிரோயினைக் கடத்தும் வில்லன் எல்லாப்படத்திலும் வீழ்த்தப்படுவான். ஆனா ஈழத்திலோ நிஜ வில்லன் ராஜபட்சே போட்ட ஆட்டம் இருக்கே….கடைசி வரை வில்லன் வீழவே இல்லை. இப்போ அந்த வில்லன்தான் அங்கே அதிபர்…. அப்போ பட்டினில் கிடந்த ஈழ மக்களுக்காக புலம்பெயர் மக்கள் உணவு, மருந்துப் பொருட்கள் எல்லாம் சேமிச்சி வணங்காமண் என்றொரு கப்பலை இலங்கைக்கு அனுப்பினாங்க ஆனால் அந்த நிவாரணக் கப்பலைக் கூட எங்க கடல்பகுதிக்குள்ள அனுமதிக்க மாட்டோம்ணாரு ராஜபட்சே………… பல மாதமா அந்தக் கப்பல் கடலிலேயே சுற்றி வந்து கடைசியில் சென்னையில் வந்து சோந்து போய் படுத்துக்கிச்சு. ஒரு வழியாக அதை கொழும்பு அனுப்புனாங்க ஆனா அது கொழும்பு போய் சேர்ந்தப்போ போரே முடிஞ்சி போச்சு உயிரோட இருக்கும் போதே உணவு கொடுக்க மறுத்த அரசாங்கம் பொணங்களுக்காகவது அந்தப் பொருட்களை கொடுத்திருக்குமாணு தெரியல்ல…….. அப்புறம் அழுதோம்…கண்ணீர் விட்டு கதறினோம். ம்ஹூம் யாரும் அசைஞ்சு கொடுக்கல்லியே…….ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டுலேர்ந்து சில பிரஸ் காரங்க இலங்கை போய் பார்த்து வந்தா என்னணு இலங்கை தூதரகத்துல போய் விசா கேட்டாங்க. ஆனா அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? தமிழைத் தாய் மொழியாக கொண்ட எந்த ஊடகவியளார்களுக்கும் விசாவே கொடுக்கல்ல. இதெல்லாம் ஏன் இங்கே சொல்றாருண்ணு நினைக்கிறீங்களா? காரணம் இருக்கு ………. நீங்க சொல்றீங்கல்லியா ஏன் எங்களை பாக்க தமிழ்நாட்டிலேர்ந்து யாருமே வரலைணு வன்னி மக்கள் கேட்கிறாங்கண்ணு அதை வந்து இப்போ சொல்றது ஈஸி.
உங்கள் இரக்க குணத்தைப் பார்த்தா புல்லரிக்குதுக்கா ஆனா உங்களோட இந்த இரக்க குணம் 2009 – ல் எங்கக்கா போச்சு? ஆக இலங்கையில சாகிற ஈழத் தமிழனை காப்பாத்த இங்குள்ள தமிழன் போக முடியாம இருக்குறதுக்கு காரணம் ஒன்று இலங்கை பக்கத்து நாடு…….இரண்டாவது இந்தியா வேடிக்கை பார்க்கிற பக்கத்து நாடு, இந்தியாவும் தமிழக அரசும் போக விடாதது மட்டுமல்ல அவங்களுக்காக பேசுனாக்கூட ஜெயில்ல தூக்கிப் போட்டுறாங்க இன்னைக்கு தேதியில கூட குறைஞ்சது 500 பேராவது ஈழ மக்களுக்காகப் பேசி சிறையில் இருக்காங்க. தவிறவும் இங்கிருந்து போறவங்க எல்லோரும் அவங்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சால்வை கொடுத்துட்டும் வந்துட்டாங்க. இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கு தர்மசங்கடம் கொடுக்கிற மாதிரியான எந்த ஒரு நபரையும் அவங்க அனுமதிக்க மாட்டாங்க இதுதான் அங்குள்ள நிலமை. மற்றபடி அங்க போகணும், மக்களுக்கு உதவணும், கூடவே தமிழ் மக்களின் மூச்சடங்கிய நந்திக்கடலை பார்க்கணும்ணெல்லாம் எங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னக்கா சொல்றீங்க……………..ஆனா நீண்டகாலமாக அந்த மக்களை நேசித்த சக்திகள் எல்லாம் போக விரும்பிய போது கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. நீங்களும் போய் வந்திருக்கிறீர்கள்.
எப்பேற்பட்ட சாதனையை செய்து வந்திருக்கிறீங்க நீங்க நான் சென்றது இலங்கை அரசை ஆதரிப்பதற்கல்ல என்றும் எனது நடிப்புத் தொழில் தொடர்பாகவே நான் சென்றேன் என்றும். இலங்கைக்குச் சென்ற பின் தமிழர்கள் அங்கே படும் துன்பங்கள் குறித்து கேள்விப்பட்டேன். விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்பாணத்திற்கு துணிச்சலாகச் சென்றேன். இதுவரை எந்த ஒரு முக்கியப் பிரமுகர்களும் 35 வருடமாக இதுவரை நுழைய முடியாத யாழுக்குச் சென்றேன் சென்றேன் என்று பீற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நந்திக்கடலில் துயரமான அந்தப் போர் முடிவுக்கு வந்த போது எஞ்சியிருப்போரை முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி வைத்திருந்தது இலங்கை அரசு. தமிழக பத்திரிகையாளர்கள், ஈழ ஆதரவாளர்கள், ஏன் இங்கிருந்து சென்ற எம்.பிக்கள், அது ஏன் இலங்கையிலேயே உள்ள எதிர்கட்சி எம்பிக்களைக் கூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்க வில்லை. உலகின் கண்களை மறைக்க சில ரெடிமேட் முகாம்களை உருவாக்கி அதிலிருந்த மக்களை மட்டுமே பார்வையிட இலங்கை அரசு அனுமதித்தது. நீங்கள் சென்றதும் அப்படியான ரெடி மேட் முகாம் ஒன்றிர்குத்தான். அந்த ரெடி மேட் முகாமுக்கிற்குக் கூட நீங்கள் தனியாக சென்று ஏதோ இமையமலை ஏறியது போல பில்டப் செய்கிறீர்களே! நீங்கள் தனியாகவாச் சென்றீர்கள்? இலங்கையில் இருந்தவரை உங்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ராஜபட்சேவின் மனைவியும் முன்னாள் மாடல் அழகியுமான ஷிராந்தி விக்கிரமசிங்கேவுடன் அதி உயர் பாதுகாப்புடன் நீங்கள் சென்றது இலங்கை அரசின் இராணுவ விமானத்தில், இராணுவத்தினரின் புடை சூழ யாழ்பாணத்தின் ரெடிமேட் முகாமிற்குச் சென்றதைத்தான் நீங்கள் சிலிர்த்துப் போய் சினிமா பாணியிலேயே பெருமிதமாகச் சொல்கிறீர்கள். சொல்வதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து ஏன் யாருமே வரவில்லை என்று அவர்கள் கேட்பதாக நீங்கள் கேட்கிறீர்கள். இங்குள்ளவர்களை குற்றவாளியாகக் காட்ட முனைகிறீர்கள். என்ன செய்வது காலக் கொடுமை தொட்ட அழுக்கு எங்கே கைகளில் ஒட்டிக் கொள்ளுமோ என்று டிஸ்யூ பேப்பரில் கை துடைக்கிற நீங்கள் சொல்லி நாங்கள் ஈழ மக்களின் துயரங்களை தெரிந்து கொள்ளும் அந்தச் சூழலும் வந்து விட்டது.
சரி கிடக்கட்டும்,
கொழும்பில் பிளாப்பான ஐஃபா விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருக்கிறது. சீமான் துவக்கி வைத்த அந்த எதிர்ப்பு வெற்றியும் அளித்தது. ஆனால் எந்த நடிகரும் இலங்கை செல்லக் கூடாது என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவரானது என்பது எனக்கும் தெரியும். இப்படி எல்லாம் கட்டுப்பாடு போட்டால் ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு போட்டவர்களே முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்க நேரிடும். அந்த வகையில் உங்களின் தொழிலான சினிமா படப்பிடிப்பிற்காக நீங்கள் இலங்கை சென்றது தொடர்பாக நான் உங்களை ஆதரிக்கிறேன். கிரிக்கெட் விளையாடச் செல்கிறார்கள், தமிழக எம்,பிக்கள் செல்கிறார்கள் நான் சினிமாவில் நடிக்கச் செல்லக் கூடாதா? என்ற உங்களின் கேள்வி நியாயமானது. யார் எதிர்த்தாலும் நான் உங்களை இந்த விஷயத்தில் ஆதரிப்பேன் ஆனால், அதையும் தாண்டி தமிழக மக்கள் ஏன் செல்ல வில்லை என்று கேட்பதோடு அண்ணன் விஜய்யும், சூர்யாவும் வரவில்லையா? என்று கேட்கிறார்கள் என்று சொல்கிறீர்களே அங்கேதான் அசின் நீங்கள் உங்கள் வர்க்க குணாம்சத்தில் பளிச்சிடுகிறீர்கள்.
ஆமாக்கா நீங்க இலங்கை சென்று உங்கள் தொழிலை மட்டுமா பார்த்து விட்டு திரும்பியிருக்கிறீர்கள். வில்லனின் மனைவி ஷிராந்தியோடு கொழும்பில் ஷாப்பிங் போனதும், கொழும்பில் அறக்கட்டளையை பதிவு செய்து கோடி கோடியாய் பண்ட் வாங்க வழி ஏற்படுத்தி வந்திருப்பதும் உங்கள் தொழில் தொடர்பானதா? எந்த சினிமாவுக்காக இதைச் செய்தீர்கள்? என்ன சுவாராஸ்யத்துக்காக இந்த ஸ்கிரிப்ட் என்று சொல்ல முடியுமா? இது தொழில் மட்டுமே தானா? அல்லது அதையும் கடந்து தனிப்பட்ட லாபங்களுக்காக கொன்றொழிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் மரணங்களோடு விளையாடவில்லையா? என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். ஷூட்டிங் போன இடத்தில் நீங்கள் ஏன் இலங்கை அரசின் நல்லெண்ணத் தூதராக யாழ்பாணம் சென்றீர்கள்.
நீங்கள் உங்களின் பயணத்தின் பின்னர் நான் 300 தமிழர்களுக்கு சொந்தச் செலவில் ஆபரேஷன் செய்தேன். ஒரு ஆபரேஷனுக்கு ஐந்தாயிரம் செலவு. எல்லாம் என் சொந்தப்பணம். பத்தாயிரம் பேருக்கு ஆபரேஷன் செய்ய இருக்கிறேன். 150 குடும்பங்களை தத்தெடுத்திருக்கிறேன்.அறக்கட்டளை துவங்கியிருக்கிறேன் என்று செலவுக்கணக்கு சொல்வது இருக்கட்டும் வருமானம் எவ்வளவு என்று சொல்லவில்லையே? ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை இனப்படுகொலை செய்த அரசு இலங்கை அரசு என்பதை இப்போது உலகம் ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. புலம்பெயர் மக்கள் மற்றும் தமிழக மாற்று இயக்கங்களின் போராட்டம் காரணமாகவும் சில மேற்குலக ஊடகங்களின் கடும் விமர்சனம் காரணமாகவும் ஐநா அவை இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறலை விசாரிக்க மூவர் குழுவை நியமித்திருக்கிறது. அக்குழுவின் விசாரணைகள் உண்மையாக நடக்க உலகம் முழுக்க மனித உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தின் ஒரு பகுதிதான் ஐஃபா விழாவை புறக்கணிக்கக் கோரியது. அக்கா……. சீமானும் சினிமாவில்தான் இருக்கிறார் இந்த வம்பு தும்பை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு முப்பது லட்சம் சமபளம் வாங்கி சினிமாவில் மிக வசதியாக செட்டிலாகக் கூடிய அளவுக்கு அவருக்கும் தொடர்பிருந்தும் அவர் விடாமல் மெனக்கெட்டு போராடுகிறார் சிறைக்குச் செல்கிறார். ஆனா நீங்க அய்யோ நான் உங்களை போராடவோ சிறை செல்லவோ சொல்லவில்லை. ஏன் தமிழ் மக்களின் வேதனை தெரியாமல் நல்லது செய்கிற நோக்கில் தீயதைச் செய்கிறீர்கள். என்பதுதான் என் கேள்வி. ஆக, இலங்கை ஒரு இனக்கொலை தேசம். அதை ஆளுகிறவர்கள் இனக்கொலை குற்றவாளிகள். ஒரு இனகொலை குற்றவாளியின் துணைவியாரோடு நீங்கள் அவர்கள் யாரைக் கொன்றார்களோ அவர்களையே போய் பார்த்து வந்து விட்டு வந்து இங்கிருப்பவர்கள் சரியில்லை என்பது போன்று பேசுகிறீர்கள். இதைச் சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இலங்கையின் இனக்கொலை குற்றவாளிகளுக்கு இப்போது உங்களை மாதிரி சாக்லெட் பேபிகளின் முகங்கள் தேவைப்படுகிறது. இதோ உங்களைத் தொடர்ந்து தமிழக சினிமா நட்சத்திரங்களும் கொழும்பு செல்லப் போகிறார்கள் என்று உங்களை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்….இலங்கையின் கொடூர ரத்தம் தோய்ந்த அதன் கோர முகங்களை மறைக்க அக்கா நீங்கள் உதவி புரிந்து வந்திருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் மிக கொதிப்பும் அவலமுமாய் மாறிப் போன ஈழக் குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என்பதை நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமே சினிமா போல இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அது அப்படியில்லை……ஏனென்றால் நாங்கள் நடிகர்கள் இல்லை.உங்களின் சினிமாக்களை காசு கொடுத்து பார்க்கிறவர்கள் மட்டுமே……..அக்கா விளையாடுங்கள்……..விளையாடிக் கொண்டே இருங்கள்………
நன்றியக்கா .
உங்கள் பாசமிகு தம்பி,
பா.மாணிக்கம்
0 Kommentare:
Kommentar veröffentlichen