சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்தி மீட்கப்பட்டது மற்றும் கடத்திய 2 இளைஞர்களை சுற்றி வளைத்ததுப் பிடித்ததோடு, பணயத் தொகையான சுமார் ஒரு கோடி ரூபாயை மீட்டது தொடர்பாக சென்னை காவல்துறை இன்று விளக்கமளித்தது.( சிறுவன் கீர்த்தி வாசன் கடத்தப்பட்ட விவரம் அறிய... லிங்க் - சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் வீடு திரும்பினான்)
கடத்தல் கும்பலிடம் சுமார் 1 கோடி ரூபாய் பணயத் தொகைக் கொடுத்து செவ்வாய்க்கிழமை சிறுவன் கீர்த்திவாசன் மீட்கப்பட்டான். அதைத் தொடர்ந்து, சென்னை காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், கடத்தலில் ஈடுபட்ட விஜய், பிரபு ஆகிய இரண்டு இளைஞர்களை பிடித்தது. அவர்களிடம் இருந்து பணயத் தொகையும் கைப்பற்றப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணி, போலீஸாரின் நடவடிக்கை மற்றும் கடத்தல் கும்பல் பிடிபட்டது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியது:
சிறுவன் கீர்த்திவாசனை கடத்தியவர்கள் விஜய் மற்றும் பிரபு ஆகிய இரண்டு பேர். இதில் விஜய்யின் வயது 26. இவர், சென்னையில் பிடெக் முடித்துவிட்டு, லண்டனில் சென்ற ஆண்டு எம்.பி.ஏ. முடித்தவர். இவருக்கு இங்கிலாந்தில் காதலியும் இருக்கிறது.
பிரபு (வயது 29) பெரம்பலூரில் டி.எம்.இ. படித்துவிட்டு, பார்ட் டைம் கோர்ஸ் ஆக எம்.இ. முடித்தவர். இவர், சிங்கப்பூரில் வேலை பார்த்தவர். இருவரும் துறையூரைச் சேர்ந்தவர்கள்.
நேற்று முன்தினம் மாலை கீர்த்திவாசன் கடத்தப்பட்டதில் இருந்து மிகக் கவனமாக செயல்பட்டோம். ஏனேனில், அண்மையில் தான் கோவை சம்பவம் நடந்திருக்கிறது. எனவே, சிறுவனுக்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டோம்.
கீர்த்தி வாசனின் பெற்றோரை வைத்து, கடத்தல்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் பெரும் தொகை கேட்டனர். ரூ.3 கோடி அளவில் பணயத் தொகையாகக் கேட்டனர். பேச்சு வார்த்தை நடத்தி, 20 லட்சம் வரை மட்டும் கொடுங்கள் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தினோம். அவர்கள், பேசி ரூ.1 கோடிக்கு கொண்டு வந்தனர்.
கடத்தப்பட்ட இரவு முழுவதும் விடிய விடிய அவ்வப்போது பேச்சு நடத்தப்பட்டது. பின்னர், ஒரு வழியாக பேசி முடித்தவுடன், பணத்தை எங்கே கொண்டு வருவது, எப்படி பையனை மீட்டுக் கொள்வது என்பது பற்றி பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அண்ணா நகர் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் பணத்தை பேக்-கில் வைத்துவிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்டபடி, அந்த இடத்தில் பணம் வைக்கப்பட்டது. அப்போது, பைக்கில் விரைந்து வந்த ஹெல்மெட் அணிந்த இரண்டு நபர்கள், அருகிலிருக்கும் காரின் பின்புறம் பையன் இருப்பதாகக் காட்டி விட்டு, பணத்தை எடுத்துச் சென்றனர்.
காரில் இருந்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். அது, திருடப்பட்ட கார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் போலீஸார் பின் தொடர்ந்தபடியே இருந்தனர். கடத்தல்காரர்கள் பைக்கில் வந்தபோது, எந்த மோதலிலும் ஈடுபடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும். ஆனால், நடத்தவில்லை. ஏனென்றால், சிறுவனுக்கு எந்த ஆபத்துமின்றி மீட்க வேண்டும் என்பதால் அப்படி அணுகினோம். அவசரப்பட்டால், ஏதாவது அசம்பாவதம் நடந்துவிட சாத்தியம் உள்ளது என்பதால் அப்படிச் செய்தோம்.
சிறுவனை மீட்ட பிறகு, கடத்தல்காரர்களை பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அணுகுமுறையை செயல்படுத்தினோம்.
கடத்தல்காரர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளின் நம்பரை வைத்தே, அவர்களை பிடித்தோம். இதற்காக, அமைக்கப்பட்ட தனிப்படை மிகத் துல்லியமாக செயல்பட்டு கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இறுதியில் நள்ளிரவுக்குப் பின் விஜய், பிரபு ஆகிய இருவரும் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தொகை, கீர்த்திவாசனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கீர்த்திவாசனின் தந்தை ரமேஷிடம் வேலைபார்க்கும் மேனேஜர் ஒருவரின் உறவினர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் என்பது தெரியவந்துள்ளது. பணத்துக்காகவே சிறுவனை கடத்தியிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார் கமிஷனர் ராஜேந்திரன்.
மீட்கப்பட்ட சிறுவனின் தந்தை ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், "இரவு பகல் பார்க்காமல் கண்விழித்து தங்கள் பிள்ளையை மீட்பதாகவே காவல்துறையினர் செயல்பட்டனர். அவர்களின் வழிநடத்தலின் பேரிலேயே நானும் செயல்பட்டேன். என் மகனை மீட்டது, பணயத் தொகையை மீட்டது அனைத்துக்குமே காவல்துறையினரின் துரித நடவடிக்கையே காரணம்," என்றார்
0 Kommentare:
Kommentar veröffentlichen