பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் கடும் தோல்வியைச் சந்தித்துள்ள அக்கட்சி, செனட் சபையை தக்க வைத்துள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று மகத்தான வெற்றி பெற்றிருப்பது, ஒபாமாவுக்கு அடுத்த இரண்டு ஆண்டு ஆட்சியில் மிகுந்த நெருக்குதலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
மெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மொத்தமுள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 100 செனட் இடங்களில் 37 இடங்களுக்கும், 37 மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில், அண்மையில் வெளியான முடிவுகளின் படி, தற்போது குடியரசு கட்சியிடம் பிரதிநிதிகள் சபையில் 239 இடங்கள் வசமுள்ளது; ஜனநாயகக் கட்சிக்கு 183 இடங்கள் கிடைத்துள்ளது.
செனட் சபையைப் பொருத்தவரையில், தற்போது ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியிடம் 51 இடங்களும், குடியரசுக் கட்சியிடம் 46 இடங்களும் உள்ளன. செனட் சபையை தக்கவைத்தாலும் ஒபாமா கட்சிக்கு அருதிப் பெரும்பான்மை இல்லை.
ஒபாமாவின் 'மாற்றத்துக்கு' அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ள பதில் தான் இந்தத் தேர்தல் என்று கருத்து தெரிவித்திருக்கிறார், குடியரசுக் கட்சியின் ஜான் பொஹனெர்.
அதிபர் ஒபாமாவின் பொருளாதரக் கொள்கைகள் மீதான அதிருப்தியின் வெளிப்பாட்டால்தான், அவரது கட்சிக்கு எதிராக அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒபாமாவுக்கு நெருக்கடி...
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் பிரசாரத்தின் போது, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது, உள்ளூர் விவகாரங்களாகவே இருந்தாலும், அந்த தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான கருத்து.
தற்போது, ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் தனது ஆதிக்கத்தை இழந்துள்ளதால், அடுத்து எஞ்சியுள்ள இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதிபர் ஒபாமா தனக்கு எதிரானவர்களால் நிரப்பப்பட்ட நாடாளுமன்றத்தையே எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது வெளியுறவுக் கொள்கைகள் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது.
அரசின் பட்ஜெட், உள்நாட்டு விவகாரங்கள் என பல விஷயங்களில் உடனடியாக நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஒபாமாவுக்கு பின்னடைவு ஏற்படும்.
எனினும், பல ஒப்பந்தங்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது போன்ற உயர் அதிகாரத்தைப் பெற்றுள்ள செனட் சபையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்ததன் விளைவாக சர்வதேச அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஒபாமாவுக்கு நெருக்குதல் இருக்காது என்றே தகவல்கள் தெரிக்கின்றன.
இந்தியாவுக்கு நன்மை?
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதிபர் ஒபாமாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், இந்தியாவுக்கு நன்மை தரும் விஷயமே என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தியாவுக்கு அவுட் சோர்ஸிங் பணிகள் வழங்குவதற்கு எதிராக ஒபாமாவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிப் பணி வழங்குவதில் இந்தியாவுக்கு சாதகமான கொள்கையையே குடியரசுக் கட்சி கொண்டுள்ளதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen