Freitag, 5. November 2010

கடத்தல்காரர்களுடன் நேருக்கு நேர்! -திகீலுடன் விவரிக்கும் கீர்த்தி அப்பா ரமேஷ்!

கீர்த்திவாசனின் அப்பா ரமேஷ்... மைன்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறவர். எனவே கோடிகளைக் கறக்கும் நோக்கத்தில் அவரது மகன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டான். மீட்பு முயற்சியில் காவல்துறையும் உளவுத் துறையும் கைகோர்த்து தீவிரமாகச் செயல் பட்டதால்... 24 மணி நேரத்தில் மாணவன் கீர்த்திவாசன் கடத்தல் கும்பலின் பிடியில் இருந்து பத்திரமாகவும் சாதுர்யமாகவும் மீட்கப்பட...’அப்பாடா’ என பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள் பொதுமக்கள்.




இந்தக் கடத்தல் தொடர்பாக பல்வேறு சந்தேகத்தை பலரும் எழுப்பிவந்த நிலையில்... அண்ணாநகர் இசட் பிளாக் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் தொழிலதிபர் ரமேஷின் வீட்டிற்குச் சென்றோம். நாம் போனபோது மகன் பத்திரமாக மீட்கப்பட்ட பூரிப்பில் இருந்தது ரமேஷின் குடும்பம். உறவினர்களும் நண்பர்களும் சாரிசாரியாய் வந்து ரமேஷை விசாரித்தபடியே இருக்க... அவரிடம் "என்ன நடந்தது?' என்றோம்.



அருகே இருந்த தன் மகன் கீர்த்திவாசனை பக்கத்தில் அழைத்து... வாஞ்சையோடு முத்தமிட்டு உச்சிமுகர்ந்த அவர்...’""என் பையன் பத்திரமா கிடைச்சதே பெருசுங்க. கடந்த 24 மணி நேரத்தில் நானும் எங்க குடும்பமும் தவிச்ச தவிப்பு இருக்கே... அது அந்த கடவுளுக்குத்தான் தெரியும். எங்க பிள் ளையைப் பத்திரமா மீட்க உதவிய காவல்துறை அதிகாரிகள் அத்தனைபேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சிக் கிறோம்'' என நெகிழ்ந்தவர்... விரிவாகப் பேச ஆரம்பித்தார்.



""கிராமத்து சூழலில் பிறந்து வளர்ந்த நான்... வறுமையைக் கடந்துதான் இன்றைக்கு இந்த நிலையை அடைஞ்சிருக்கேன். ஆரம்பத்தில் மைன்ஸ் பிஸ்னஸில் இருந்த எங்க உறவினர் துறையூர் கனகராஜ்கிட்ட வேலை செஞ்சேன். அங்கதான் தொழிலைக் கத்துக்கிட்டேன். அப்புறம் தனியா தொழில் பண்ணி முன்னுக்கு வரும் வெறியோட ஜார்கண்ட், பீகார்னு பல ஊர்களுக்கும் போய் உழைச்சேன்.



நான் மைன்ஸ் தொழிலில்.. எனக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பிச்சிது. சென்னை அண்ணா நகர்ல வீடு வாங்கி செட்டில் ஆனேன். பல இடங்களில் சொத் துக்களை வாங்கிப்போட்டேன். விரைவில் அஞ்சு ஃப்ளோர்ல டெக்ஸ்டைல்ஸ் மால் காம்ப்ளக்ஸ் திறக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கேன்.



இந்த நிலையில்தான் கடந்த மூணு மாசத்துக்கு முன்ன... ஒரு மிரட்டல்போன் வந்துச்சு. "கேட்கிற பணத்தைக் கொடுக்காட்டி... ஸ்கூல்ல படிக்கும் உன் பையனைக் கடத்திட் டுப்போய்டுவோம்'னு மிரட்டினானுங்க. பதிலுக்கு நான்... "உன்னால் முடிஞ்சா கடத்திப்பாருடா. நான் எவனுக்கும் பணம் தரமாட்டேன்'னு கோபமா அவனைத் திட்டினேன். அதோட நிக்காம அண்ணாநகர் ஏ.ஸி.கிட்ட புகார் பண்ணி னேன். அவர் போன் நம்பரை டிரேஸ் பண்ணினப்ப... போலி முகவரி கொடுத்து வாங்கிய சிம்மில் இருந்து அவன் பேசியதைக் கண்டுபிடிச்சார். யாரையும் பிடிக்கமுடியலை.



நானும் அந்த விவகாரத்தை அதோட விட் டுட்டு... தொழிலில் முழு கவனத்தையும் திருப்ப ஆரம்பிச்சேன். இருந்த போதும் வீட்டுப் பாதுகாப்பை டைட் பண்ணினேன். ஸ்கூலுக்குப் போய் வந்த என் பையனை ஒரே கார்ல அனுப்பாம.. வெவ்வேறு கார்கள்ல அனுப்பத் தொடங்கினேன். நானும் என் குடும்பத்தினரும் கூட ரொம்ப எச்சரிக்கையா இருக்க ஆரம்பிச்சோம். இந்த நிலையில்தான் இப்ப இப்படி ஒரு சோதனை...'' என்றார் படபடப்பு மாறாமல்.



""உங்க பையனைப் பத்தியும்... கடத்தல்... மீட்பு விவகாரம் பத்தியும் சொல்லுங்க?'' என்றோம் அவரிடமே.



""எங்க கீர்த்திவாசன் முகப்பேறு டி.ஏ.வி ஸ்கூல்ல ஒன்பதாவது படிக்கிறான். எங்க வீட்டில் ஒரு போர்ஷனிலேயே மூணு வருசமா தங்கியிருக்கும் எங்க டிரைவர் கோ விந்தராஜ்தான் கீர்த்தி யை ஸ்கூல்ல விட்டுட்டு அழைச்சிக்கிட்டு வரு வார். திங்கட்கிழமை வழக்கம்போல் ஸ்கூல்ல விட்ட அவர்.. அன் னைக்கு சாயந்திரம் 3.45-க்கு அவனை பிக்கப் பண்ணப் போனார். பையன் பின் சீட்டில் ஸ்கூல் பேக்கை வச்சிட்டு முன்பக்கம் ஏறியதும் டிரைவர் காரை ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கார். அப்ப குபீர்னு ரெண்டுபேர் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்துக்கிட்டு... எங்க கீர்த்தி கழுத்திலும் டிரைவர் கழுத்திலும் கத்தியை வச்சி... வண்டியை நாங்க சொல்ற ரூட்ல விடணும்னு சொல்லியிருக்கானுங்க. அவனுங்க சொன்னபடி கொஞ்ச தூரத்தில் ஆள் நடமாட்ட மில்லாத பெட்ரோல் பங்க் பக்கத்தில் இருக்கும் சந்தில் டிரைவர் காரைக் கொண்டுபோய் நிறுத்த... டிரைவரைக் கீழே பிடிச்சித் தள்ளிட்டு... காரோடு கீர்த்தியைக் கடத்திட்டுப் போய்ட்டானுங்க. அவனுங்க எனக்கு போன் பண்ணி "உன் பையனைக் கடத்திட்டோம். 3 கோடி ரூபாய் கொடுக்க லைன்னா அவனைக் கொன்னுடுவோம்'னு மிரட்டி னானுங்க. அப்பதான் எங்க கீர்த்தி கடத்தப் பட்டதே எனக்குத் தெரியவந்துச்சு. பதறிப்போய்ட் டேன். இருந்தும் அதைக்காட்டிக்காம பணமெல் லாம் தரமுடியாதுன்னு கோபமா சொன்னேன். உடனே போனைக் கட் பண்ணிட்டானுங்க.



இந்தத் தகவலை நான் போலீஸுக்குத் தெரிவிச்சேன். போலீஸ் அதிகாரிகள் என்னை விசாரிச்சாங்க. அவங்களோட கே-4 ஸ்டேசனுக்குப் போனேன். அங்க போனப்பவும் அவனுங்கக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. கோபப்படாம சாஃப்ட்டா பேசுங்கன்னு போலீஸ் அதிகாரிகள் சொல்ல... அதன்படி குரலை சாஃப்ட் ஆக்கிக்கிட்டு உங்களுக்கு என்ன வேணும்? எங்க வரணும்னு கேட்டேன்.



அப்புறம் சொல்றோம்னு சொன்னவனுங்க... அரை மணி நேரத்துக்கு ஒருதரம் பணம் ரெடியான்னு கேட்டபடியே இருந்தானுங்க. இரவு போன்ல வந்து எங்கே இருக்கேன்னு கேட் டானுங்க. என் ஃபிரண்ட் வீட்லன்னு நான் சொல்ல... பொய் சொல்லாதே... இப்ப நீ கே-4 போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன்னு என்னை அதிரவச்சானுங்க. நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பதைக்கூட கண்காணிக்கிறானுங்கன்னா இவனுங்க சாதாரண ஆள் இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டேன். போலீஸும் அவனுங்கக்கிட்ட முதல்ல பணத்தைக் கொடுத்து பையனை மீட்டுட்டு.. அப்புறம் அவனுங்களை மடக்கலாம்னு திட்டம் போட்டாங்க. நைட் 10.30-க்கு போன் வந்தது. பணம் ரெடின்னு சொன்னேன். இருட்டாயிடிச்சி. காலையில் பேசுறோம்னு சொன்னாங்க. ராத்திரி நேரம். குழந்தை பயப்படுவான். இப்பவே பணம் தர்றேன். விட்டுடுங்கன்னு கெஞ்சினேன். முடியாது. காலைல பேசறோம்னு லைனைக் கட் பண்ணிட்டானுங்க.



நைட் முழுக்க திக்திக்குன்னு இருந்தது... நாங்க யாரும் தூங்கலை. காலைல 9 மணிக்கு போன் வந்தது. பணம் ரெடியா இருக்கான்னு கேட்டானுங்க. ரெடின்னு சொன்னோம். பிறகு கூப்பிடறோம்ன்னு சொன்னானுங்க. மதியம் போன் பண்ணி ‘திரும்பவும் ஸ்டேஷன்ல இருக்கியான்னு கேட்டாங்க. நாங்க ஏற்கனவே குடியிருந்த ஹெச் பிளாக் வீட்டுக்கு வந்து என் நண்பர் ஒருத்தரோட இருக்கேன்னு சொன்னேன். மதியம் 3 மணியளவில் கார்ல ஏறு... அப்படியே ரைட்ல திரும்புன்னு சொன்னானுங்க. அதே மாதிரி பணப் பையோடு கிளம்பினோம். ரைட்ல திரும்பும் இடத்தில் ஒரு சின்ன சந்து. அதில் பைக்ல ரெண்டு பேர் காத்திருப்பது தெரிஞ்சிது. அவனுங்களாத்தான் இருக்கும்னு நினைச்சி... காரை அவங்கக்கிட்ட நிறுத்திட்டு இறங்கினேன்.



அவனுங்க... ஒரு பேப்பரை ஒட்டி முகத்தை மறைச்சிக்கிட்டு இருந்தானுங்க. பைக்கின் முன்பக்கம் இருந்தவன் ஆக்ஸிலேட்டரை கிர்கிர்ருனு முறுக்கிக் கிட்டே... சீக்கிரம்.. சீக்கிரம்னு சொல்ல... பைக்ல பின்னால் இருந்தவன் இறங்கி வந்தான். அவனுங்க முகஜாடையைப் பார்த்ததும் இவனுங்களை எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு தோணுச்சு. இவனுங்க யாரா இருக்கும்னு யோசிச்சபடியே... உங்களுக்கு பணம் வேணும். எனக்கு என் பையன் வேணும்னு சொன்னேன். பேக்கைத் திறந்து காமின்னு சொன்னான். திறந்து பணத்தைக் காட்டிட்டு பணப்பையை காருக்குள் போட்டேன். சீக்கிரம் சீக்கிரம் பணத்தைக் கொடுன்னு அவன் கேட்டான். முதல்ல பையனைக் காட்டு.. பணம் கொடுக்குறேன்னு சொன் னேன். எங்க பேச்சு நீண்டுகொண்டே போவதை பைக்கை ஓட்டிவந்தவன் விரும்பலை. பதட்டமாவே சீக்கிரம் சீக்கிரம்னு தன் சகாவை விரட்டினான். இதனால் அவன் ஒரு கார் சாவியை என்கிட்ட கொடுத்து... அதோ அங்கே நிக்கிற காரைத் திற... அதுலதான் உன் மகன் இருக்கான்னு சொன்னான். உடனே ஓடிப்போய் அந்தக் கார் டிக்கியைத் திறந்தேன்.



என் பையன் மிரட்சியோட இருந்தான். அவனைப் பார்த்ததும்தான் எனக்கு உயிரே வந்துச்சு. நண்பர், டிரைவரோட சேர்த்து நாம மூணு பேர் இருக்கோம். அவனுங்க ரெண்டுபேர்தானே. அவனுங் களோடு நேருக்கு நேரா மோதிப் பார்த்துடலாம்னு ஒரு கணம் நினைச்சேன். கார்ல இருந்த என் நண்பரும் இதையே நினைச்சிருக்கார். இவனுங்களோட ஆட்கள் வேற எங்கயாவது இருந்து இதை கண்காணிச் சிக்கிட்டே இருந்து... அதிரடியா என் மகனை மடக்கி ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றதுன்னு.. மோதுற முடிவைக் கைவிட்டேன்.



என் நண்பரும் இதைப்போலவே யோசிச்சி காரியம் கெட்றக்கூடாது. பையன்தான் முக்கி யம்னு அமைதியாயிட்டார். உடனே பணத்தைக் கொடுக்கும்படி நண்பருக்கு சைகை பண்ணினேன். அவர் பேக்கைக் கொடுக்க.. அவனுங்க பணத்தை வாங்கிட்டு தடதடன்னு எஸ்கேப் ஆயிட்டானுங்க. என் செல்ல மகனைக் கடத்திய அவனுங்களை நேருக்குநேர் பார்த்தும்... பையனை யோசிச்சி அவ னுங்களை ஒண்ணும்பண்ண முடியாமப் போச்சி. பிடிபட்ட பிறகுதான்... அட இந்தப் பசங்களா இப்படி பண்ணினாங்கன்னு ரொம்ப அதிர்ச்சியாப் போச்சி'' என்றார் இன்னும் திகில் விலகாமல்.



-காமராஜ்

அட்டை மற்றும் படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின்









சிக்கியவர்களின் வாக்குமூலம்!





பிடிபட்ட குற்றவாளிகளான விஜய்யும் பிரபுவும் உறவினர்கள். விஜய்யின் அத்தை பையன்தான் பிரபு. துறையூர் பக்கமுள்ள கிருஷ்ணாபுரம் கிராமம்தான் இவர்களின் சொந்த ஊர். விஜய்யின் அப்பா ராமையா ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் அதிகாரி. அவருக்கு சென்னையில் 7 ஃப்ளாட்டுகள் உள்ளன. விஜய் லண்டனில் எம்.பி.ஏ. முடித்தவன். பிரபு சிங்கப்பூரில் எம்.பி.ஏ. படித்தவனாம். சென்னையில் வேலை பார்க்கலாம் என வந்த விஜய்க்கு இந்தக் கடத்தல் ஐடியா உருவானவுடன், சிங்கப்பூரிலிருந்த பிரபுவை இங்கே வரவழைத்திருக்கிறான். விஜய்யின் அப்பா ராமையாவோ இந்த விவரம் எதுவும் தெரியா மல், கீர்த்திவாசன் மீட்கப் பட்டதும் அவன் வீட்டிற்குச் சென்று, நல்லபடியா வந்து சேர்ந்தியே என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மகனும் உறவுக்காரப் பையனான பிரபுவும்தான் கடத்திய வர்கள் என்பது அப்போது அவருக்குத் தெரியாது. போலீஸ் பிடியில் சிக்கிய அந்த இருவரும், ""தொழிலதிபர் ரமேஷைப் பார்த்ததும்... குறுக்கு வழியில் அவர்ட்ட பணத்தைக் கறக்கும் முயற்சியில் இறங்கினோம். ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டினோம். அப்ப அது சரியா நடக்கலை. நிஜமாகவே அவர் மகனைக் கடத்தினால் அவர் துடித்துப் போவார். கையில் நிறைய பணம் புழங்குவதால் போலீஸுக்குப் போகாமல் பணத்தைக் கொடுத்து மகனை மீட்டுக்கொள்வார் என கணக்குப் போட்டோம். ஆனால்...'' என்று அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். விஜய்யின் செல்லில் அவன் ஒரு இளம் பெண்ணோடு கட்டிப் பிடித்தபடி இருக்கும் படத் தைப் பார்த்த அதிகாரிகள்... இது குறித்து கேட்க... ""லண்டன்ல இருக்கும்போது நான் காதலிச்ச பொண்ணு சார் அவ'' என்றான் விஜய்.



போலீஸோ, கடத்தலில் விஜய், பிரபு தீவிரமாக இருந்தபோது இவர் களோடு போனில் பேசியவர்களையும் விசாரித்துக் கொண்டிருக்கிறது.







சபாஷ் போலீஸ்!





மாணவன் கீர்த்தி வாசனைக் கடத்திய பிரபுவையும் விஜய்யையும் அதி ரடியாக மடக்கியது எப்படி? என தனிப்படை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது “""ரொம்பவும் ஜாக் கிரதையாக் கையாள வேண்டிய ஆபரேசன் இது. முதல்ல பையனை பத்திரமா மீட்கணும் என்பதில் நாங்க உறுதியா இருந்தோம். கமிஷனர் ராஜேந்திரன் தனிப் படைகளை அமைச்சி... மூவ்களை வாட்ச் பண்ணியபடியே இருந்தார். கமிஷனரும் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தரும், இணைக் கமிஷனர்கள் தாமரைக்கண்ணனும் சஞ்சய் அரோராவும்.. களத்தில் இறங்கியதோட திங்கட்கிழமை இரவு முழுக்க யாரும் தூங்கலை. சென்னையின் வாசல்பகுதிகளா இருக்கும் 17 பாயிண்ட்டுகளிலும் போலீஸைக் குவிச்சு... சென் னையை லாக் பண்ணிட்டோம்.



உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டின் பங்களிப்பு குற்ற வாளிகளை மடக்க ரொம்பவும் உதவுச்சி. தொழிலதிபர் ரமேஷோட குற்றவாளிகள் தொடர்புகொண்ட போனை டிரேஸ் பண்ணி... அவனுங்க... எந்தெந்த பகுதிகளுக்கெல்லாம் போறா னுங்கன்னு கண்காணிச்சதோட... அவனுங்க யார் யார் கூடவெல்லாம் பேசினானுங்கன்னு பார்த்து அவங்க நம்பரையெல்லாம் எடுத்து... அவங்க மூலம் அவனுங்க முகவரியை கண்டுபிடிச்சார். பணத்தை வாங்கிட்டுப் போனவனுங்க.. கோட்டூர்புரத்தில் தங்கி யிருப்பதை உளவுத்துறை கண்டு பிடிச்சதால்... அவனுங்க தங்கியிருந்த வீட்டுக்கு செவ் வாய்க் கிழமை நைட் போலீஸ் போனது.



அவனுங்க தண்ணியடிச்சிட்டு நல்ல மப்பில் தூங்கிட்டு இருந் தானுங்க. ’எந்திரிங்கடா மாப் பிள்ளைகளா... வாங்கடா போ வோம்னு அவனுங்களை நாங்க தூக்கிட்டு வந்துட்டோம்'' என் றார்கள் அதிரடியாய் மடக்கிய பெருமிதத்தோடு.



கமிஷனர் ராஜேந்திரனிடம்... "பையனை மீட்ட ஸ்பாட்டிலேயே குற்றவாளிகளை ஏன் மடக்க வில்லை?'’’என்றபோது...’’""பையனின் உயிர்தான் எங்களுக்கு முக்கியம். அவனை மீட்கும் நேரத்தில் ஏதாவது அதிரடியை நாங்கள் காட்டப்போய்.. பையனுக்கோ... சாலையில் போகிறவர்களுக்கோ விபரீதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடா தில்லையா? அதனால்தான் விட்டுப் பிடிக்கும் பாலிஸியைக் கையாண்டோம். க்ளைமாக்ஸ் சுபம்தானே. அதுதானே வேண்டும்'' என்றார் புன்னகையோடு.



இந்தக் கடத்தல் விவகாரம் தன் காதுக்கு வந்ததுமே கலைஞர்... கமிஷனர் ராஜேந்திரனிடம் ""கோவை யில் இப்பதான் ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கு. இந்த நேரத்தில் இப்படியா? கேட்கும் போதே பதைப்பா இருக்கு. கண்ணீர் கசியுது. ரொம்ப ஜாக்கிரதையா பையனை மீட்கணும்'' என்றதோடு... மீட்கப்பட்ட செய்தி கிடைத்ததும் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.



எது எப்படியோ சிறுவன் கீர்த்திவாசன் பத்திரமாக மீட்கப் பட்டுவிட்டான். அவனை சாதுர்யமாக மீட்க உதவிய காவல்துறைக்கு தமிழகமே.. தீபாவளி ஸ்வீட்டோடு தனது பாராட்டுக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.







""மூச்சுத் திணறியது'' சிறுவனின் பகீர் அனுபவம்!





கடத்தப்பட்ட திகில் அனுபவம் எப்படி இருந்தது என கீர்த்திவாசனிடம் நாம் கேட்டபோது.. வெடவெடப்பு மாறாமலே விவரிக்க ஆரம்பித்தான் அவன்.... ""எங்க டவேரா கார்ல நான் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு கிளம் பினப்பதான் அந்த அண்ணனுங்க என்னை கடத்தினாங்க. டிரைவர் அங்கிளை கொஞ்சதூரத்தில் கீழே தள்ளிட்டு.. என்னை எங்க கார்லயே கொஞ்சதூரம் கொண்டு போனாங்க. அப்புறம் அந்தக் காரை ஒரு இடத்தில் நிறுத்திட்டு.. அங்க இருந்த ஷிப்ட் டக்கர் காரில் ஏத்தினாங்க. அப்புறம் அந்தக் கார் ஒரு கிரவுண்ட்டில் நின்னுச்சு. அது எந்த இடம்னே தெரியலை.



ஒரே இடத்தில் இருந்தா போலீஸ் நம்மைக்கண்டு பிடிச்சிடுவாங்க. அதனால் ரவுண்ட்ஸிலேயே இருக்க ணும்னு பேசிக்கிட்டவங்க... என்னை காரின் பின் சைடில் இருக்கும் டிக்கி மாதிரியான இடத்தில் தூக்கிப்போட் டாங்க. கார் எங்கயாவது நிக்கும் அவங்க இறங்கிப் போவாங்க. அப்ப மூச்சுத்திணறும். அதனால் அழுவேன். இதைப் பார்த்ததும் இறங்கும்போதெல்லாம் ஏ.ஸி.யைப் போட்டுட்டுதான் போவாங்க. அம்மா- அப்பா ஞாபகத்தில் அழுதுக்கிட்டே இருந்தேன்.



சாப்பிட பிஸ்கட், சாப்பாடெல்லாம் கொடுத்தாங்க. ஆனாலும் எனக்கு சாப்பிடவே பிடிக்கலை. என்னை எப்ப என்ன பண்ணுவாங்களோன்னு பயமாவே இருந்தது. முதல்நாள் ராத்திரி.. அம்மா- அப்பா ஞாபத்தில் அழுதபடி கார்லயே தூங்கிட் டேன். நான் எங்க போய்க்கிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியலை. என்னை எழுந்திரிக்க விடாம படுத்தே இருக்கச் சொன்னாங்க. மத்தபடி அவங்க எங்கிட்ட எதுவுமே பேசலை. என்னை அவங்க அடிக்கவும் இல்லை. ஆனா அவங்க என்னை உயிரோட விடுவாங்களா? அம்மா- அப்பா வை மறுபடி பார்க்கமுடி யுமான்னுதான் பயந்துக்கிட்டு இருந்தேன். எப்படியோ பொழைச் சிக்கிட்டேன் அங்கிள்'' என் றான் மழலை வாசனை மாறாத குரலில்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen